Powered By Blogger

Sunday, April 10, 2011

மெல்லத் தமிழ் இனி சாகும்

முன்னுரை
“ இருந்தமிழே உன்னால் இருந்தேன்-இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”
என்று தமிழ்விடுதூது என்னும் இலக்கியத்தில் ஒரு பழந்தமிழ்ப் புலவன்
பாடினான். ஆனால் இன்று தமிழின் நிலை என்ன? தமிழ் கற்றவர்க்கு
என்ன பயன் விளைந்தது என்று ஆராய்ந்தால் தமிழின் இன்றைய
இரங்கத் தக்க நிலை விளங்கும். வழக்கிழந்த மொழியாகிய வடமொழி
காலப்போக்கில் மறைந்துவிடும்; தமிழ் மொழி தலை நிமிர்ந்து நிற்கும்
என்ற தமிழர்களின் நம்பிக்கை இன்று பொய்யாய்ப் பழங்கனவாய்ப்
போய்விட்டதோ? என்று அஞ்சுகிற நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

தமிழரின் இன்றைய நிலை
“தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா”
என்று பாடிய நாமக்கல்லாரும்.
“அத்திலக வாசனை போல்
அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க
இருந்த பெரும் தமிழணங்கே”
என்று பெருமிதமுற்ற மனோன்மணீயம் சுந்தரனாரும் நல்வினைப் பயனாக
இன்று இல்லை. இருந்திருந்தால் தமிழின், தமிழரின் இழிநிலை கண்டு
ஆற்றாது மனம் கலங்கி இருப்பர்.
தமிழரின் அன்றைய பெருமையும் இன்றைய சிறுமையும்
திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும் குன்றெறிந்த
முருகவேளும் நாவீறு கொண்ட நக்கீரனாரும் சங்கம் வைத்து வளர்த்த
தமிழ் அன்று அரியணையில் அரசோச்சி இருந்தது. அரசர்களின்
அருந்தவப்புதல்வியாக வளர்ந்தவள் தமிழ் மகள். மன்னனும் மக்களும்
தமிழ் மண்ணின் மீது அன்பும் தமிழ் மொழியின் மீது பற்றும் உடையவர்களாக
விளங்கினர். இலக்கியங்கள் எழுந்தன மக்களின் வாழ்க்கையைச் சீரமைக்கும்
அறநூல்கள் பிறந்தன. புலவர்கள் போற்றப்பட்டனர். சங்க காலத்தில்
தழைத்திருந்த தமிழ் மொழி களப்பிரர் காலத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
காப்பியங்களும் சிற்றிலக்கியங்களும் தமிழைக் காத்தன. ஆங்கிலேயர்
காலத்தில் தமிழுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. ஆங்கிலக் கல்வியின்
தாக்கத்தால் அறிவியல் எழுச்சி பெற்றது. மறைந்து போன வடமொழியை
மீட்டுருவாக்க அம்மொழி கற்றவர்கள் அதற்கான முயற்சியில் முனைப்புக்
காட்டினர். தங்கள் மொழி வளராவிடினும் ஆங்கில மொழியின் துணை
கொண்டு தமிழை அழித்திட முயன்றனர். தூய தமிழை மறைத்து
வடமொழியையும் ஆங்கிலத்தையும் தமிழில் கலந்து ஒரு கலப்பு மொழியை
உருவாக்கினர். இந்தியைத் தமிழகத்தில்நுழைத்திடத் தமிழ்ப் பகைவரோடு
கைகோர்த்தனர். அவர்களது முயற்சியை எதிர்த்து எழுந்தவை தான்
தனித்தமிழ் இயக்கமும் திராவிட இயக்கமும். பெரியாரும் அண்ணாவும்
இந்தி எதிர்ப்புப் போரை முன் நின்று நடத்தினர். அண்ணா அரியணை ஏறியதும்
இந்தியைத் தமிழ்நாட்டிலிருந்து விரட்டித் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே
இருக்கும் வண்ணம் இருமொழிக் கொள்கையைக் கொண்டு வந்தார்.

தமிழ்ப் புறக்கணிப்பு
எழுச்சியும் ஏற்றமும் பெற்று வந்த தமிழ் மொழி காலப்
போக்கில் மெல்ல மெல்லப் புறக்கணிக்கப்பட்டது. அண்ணாவுக்குப் பின்
வந்த ஆட்சியாளர்கள் அனைவரும் சுயநல அரசியலில் ஈடுபட்டதால்
தமிழ் வளர்ச்சியைப் பற்றிக் கவலைபடவில்லை.


தமிழ்ப் பாடமொழி, தமிழ்ப்பயிற்றுமொழி, தமிழில்
படிப்போருக்கு வேலையில் முன்னுரிமை என்றெல்லாம் சட்டங்கள்
இயற்றுவதும் அவற்றை எதிர்த்துத் தமிழர்களே வழக்குத் தொடுப்பதும்
நீதிமன்றத் தடையால் அவை நிறைவேறாமல் நின்று போவதும்
இந்நாட்டில் வழக்கமாகிவிட்டன. உயர் கல்விக்கான தகுதிப் பட்டியலில்
தமிழுக்கு இடமே இல்லை. ஆங்கில மொழி அறிவு அற்றவர்களாக உள்ள
மாணவர்களுக்குக் கூட அம்மொழியில் பயிற்சியளித்து வெளிநாட்டு வேலை
வாய்ப்புக்கு வழி வகுக்கப்படுகிறது. ஆனால் தமிழ் மொழி எதற்கும்
தகுதியற்றது என்ற நிலை தான் நாட்டில் நிலவுகிறது.



முடிவுரை
உயர் கல்விக்கான/தொழிற்கல்விக்கான தகுதியில் தமிழில் பெறும்
மதிப்பெண்ணும் சேர்க்கப்பட்டால் தான் தமிழுக்கும் ஒரு மரியாதை
உண்டாகும். சப்பான் போன்ற நாடுகளைப் போலத் தாய்மொழியில் தான்
படித்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் தான் தமிழ் வாழும் -
வளரும் இல்லையேல் மெல்ல அல்ல விரைவிலேயே தமிழ்
மறக்கப்பட்டுவிடும் நிலை உண்டாகும்.

இக்கட்டுரை தமிழ் நண்பர்கள் நடத்திய கட்டுரைப்போட்டி2011-இல் பரிசு பெற்றது.