Powered By Blogger

Friday, July 8, 2011

MASTER OF ALL SUBJECTS

தமிழ்வாணன்



ஒரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் அந்தத்துறையில்
மட்டுமே அறிவு பெற்றிருப்பார்கள் ஆனால் அனைத்துத் துறை நூல்களையும்
படித்து எல்லாத் துறையிலும் வல்லவராக விளங்கிய திரு தமிழ்வாணன்
அவர்களுக்கு MASTER OF ALL SUBJECTS என்ற புதியதொரு பட்டத்தை மக்கள்
சூட்டி மகிழ்ந்தது அவரது புகழை வெளிப்படுத்துகிறது.
அவர் தொடாத துறையும் இல்லை தொட்டுத் துலங்காத துறையும் இல்லை.
TIT BITS என்னும் குறுந்தகவல்களை மக்களுக்கு எடுத்துச்
சொல்வதற்காகவே ஒரு பத்திரிகை அந்நாளிலேயே இருந்ததென்றால் அது
கல்கண்டு மட்டும்தான்.
இன்று பத்திரிகைகள் பல்வேறு தகவல்களை வெளியிடுகின்றன ஆனால்
ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் கல்கண்டைத் தவிர மற்றப் பத்திரிகைகளில்
சிறுகதை, தொடர்கதை, நகைச்சுவைத் துணுக்குகள் இவை மட்டுமே
இடம்பெற்றிருக்கும் அந்தக் காலகட்டத்தில் பள்ளி மாணவர்களும், கல்லூரி
மாணவர்களும் வீட்டில் உள்ள பெண்களும் பொது மக்களும் உலக
நடப்புகளையும் அறிவியல் முன்னேற்றங்களையும் பல்துறை அறிவையும்
பெறக் காரணமாய் இருந்தவை தமிழ்வாணன் அவர்களின் எழுத்துக்கள் தான்
என்று கூறினால் அது மிகையாகாது.
இன்று கணினியும் இணையதளங்களும் தொலைக்காட்சியும் உலகத்தை
நமது வீட்டுக்குள் கொண்டு வந்து விட்ட நிலையில் தகவல்களைப் பெறுவது
சிரமமான செயல் அல்ல. ஆனால் இவையெல்லாம் இல்லாத அந்தக் கால
கட்டத்தில் பத்திரிகைகளும் வானொலியும் இருந்த போதிலும் தகவல்
பரிமாற்றம் பெருமளவில் நிகழவில்லை. வெளிநாட்டு இதழ்களையும்
அவ்வபோது வெளியாகும் சிறந்த புத்தகங்களையும் படித்து அவற்றில் உள்ள
செய்திகளைத் தமிழர்களும் அறிய வேண்டும் என்ற உயரிய நோக்கில்
அவற்றையெல்லாம் சிறு சிறு துணுக்குகளாக்கிக் கல்கண்டில் வெளியிட்டார்
. இயற்கை மருத்துவமானாலும் புதிய அறிவியல் படைப்புக்களானாலும்
உலக அரசியல் நிகழ்வுகளானாலும் சினிமா விளையாட்டு விலைவாசி
வேளாண்மை புதிய நூல்கள் இவற்றையெல்லாம் பற்றி நறுக்குத் தெறித்தாற்
போல் சின்னச் சின்ன வாக்கியங்களில் தெளிவாகப் புரியும் படி கல்கண்டில் வெளியிட்டு
வந்தார்.
மக்கள் நல்ல வண்ணம் வாழத் தேவையான ஒழுக்க நெறிகளையும் அறவியல் கருத்துகளையும் சிறு சிறுகட்டுரைகளாக வடித்துத் தந்தவர்.
மேலை நாட்டினர் போற்றிக் கொண்டாடும் கற்பனைக் கதாபாத்திரமான துப்பறியும்
ஷெர்லக் ஹோம்ஸ் போன்று தமிழர்கள் நெஞ்சில் நிலைத்திருகுகும் சங்கர்லால் என்ற
புகழ் பெற்ற கேரக்டரை உருவாக்கி உலவவிட்டவர் தமிழ்வாணன்.

இன்று தொலைக்காட்சியின் எந்தச் சேனலைத் திருப்பினாலும் மருத்துவக் குறிப்பு,அழகு குறிப்பு உளவியல் ஆலோசனை சுயமுன்னேற்றத்திற்கு வழிகாட்டுதல் என்று பல நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். ஆனால் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இப்படிப் பட்ட செய்திகளையெல்லாம் அறிய கூடிய வாய்ப்பு இல்லாத நிலையில் அத்தனை செய்திகளையும்
தனி ஒருவராகத் திரட்டித் தமிழர்களுக்கு வழங்கிய பெருமைக்குரியவர் அறிஞர் தமிழ்வாணன்.
"யாரொடும் பகையிலன் எனில் போரொடுங்கும் புகழ் ஒடுங்காதால்" என்று கவிச்
சக்கரவர்த்தி கம்பர் உரைத்தபடி எல்லோருடனும் நட்பு பாராட்டி சிரித்தபடியே அனைவரையும்
சிரிக்க வைத்த நல்லவர் நாவீறு கொண்ட நல்ல தமிழ்ப் பேச்சாளர்.

இவையெல்லாம் என்னுடைய தாத்தா சேர்த்து வைத்துள்ள கல்கண்டு
தொகுப்புகளிலிருந்தும் என்னுடைய தந்தை கூறிய அனுபவங்களிலிருந்தும் நான்
அறிந்தவை சிறந்த எழுத்தாளரும் பதிப்பாளருமான தமிழ்வாணன் அவர்களின் எழுத்துப்
பணியையும், பதிப்பு பணியையும் அன்னாரது புதல்வர்கள் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களும் திரு.ரவி தமிழ்வாணன் அவர்களும் தொடர்ந்து சிறப்புற ஆற்றி வருகிறார்கள்.
என்பது தமிழுக்குப் பெருமை தமிழர்களுக்கும் பெருமை.