Powered By Blogger

Saturday, March 11, 2023

 கண்ணீர் அஞ்சலி

இரா.வேலம்மா ள் 
தோற்றம் - 25-03-1949  மறைவு 18-02.2022
சென்ற ஆண்டு 18 - ஆம் தேதி இரவு  1 மணிக்கு இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்
 
 

எனது தந்தை திரு.மறைமலைராமசாமி அவர்கள் 07.03.2023 அன்று நள்ளிரவு 1.30 மணிக்கு இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.



Thursday, March 15, 2018

தமிழ் இலக்கியம் காட்டும் தேசிய ஒருமைப்பாடு


முன்னுரை
       இன்று உலகில் அமைதி நிலவுவதற்கும் சமதர்ம சமுதாயம் மலர்வதற்கும் மக்களின் ஒருங்கிணைப்பும் மனங்களின் ஒருமைப்பாடும் இன்றியமையாத தேவைகள். நாடு நன்னாடாகவும் வளத்தில் பொன்னாடாகவும் திகழ்வதற்கு முழுமுதற்காரணமாக விளங்குபவர்கள் அந்நாட்டு மக்களே ஆவர் இதைத் தான் ஔவையார்

நாடா கொன்றோ காடா கொன்றோ
     அவலா கொன்றோ மிசையா கொன்றோ
                                        எவ்வழி நல்லவர் ஆடவர்       
                                       அவ்வழி நல்லை வாழிய நிலனே 1

என்று பொருண்மொழிக் காஞ்சி துறையில் பாடியிருக்கிறார்.

                               நாடு என்பது பல்வேறு குணநலன்களையும் வேறுபட்ட உழைக்கும் திறனையும் கொண்ட மக்களால் பின்னப்பட்டது. ஆயினும் அவர்கள் அனைவரையும் தேசியம் என்ற இணைப்பு நூலால் ஒருங்கிணைத்து ஒரே நாடாக உருவாக்குவதுதான் தேசிய ஒருமைப்பாடு. ஒருமைப்பாடு இல்லையேல் உலகம் இல்லை. இந்த உண்மை தற்காலத்திற்கு மட்டுமன்றி முற்காலத்திற்கும் எக்காலத்திற்கும் பொருந்திவருவது. இந்த ஒருமைப்பாட்டு நிலையை தமிழ் இலக்கியங்களின் வழி கண்டறிதலே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம்.

ஒருமைப்பாடு
        சமூகத்தில் மக்களை ஒருங்கிணைப்பதற்கு உதவும் கருவிகளாக இனம், மொழி, மதம் சமயம் ஆகியவற்றை உருவாக்கினர் நம் முன்னோர். ஒருமை என்ற சொல்லிற்கு இறையுணர்வு – ஒற்றுமை - ஒரேதன்மை, மனம்ஒன்றுகை - மனம்ஒருமிக்கை என்று பொருள் தருகிறது ஆனந்தவிகடன் அகராதி.2 அதைப் போல ஒருமைப்பாடு என்பதற்கு ஒன்றிப்பு, ஒற்றுமைப்படுத்தல் என்று விளக்கமளிக்கிறது.‑3

             ஆங்கிலத்தில் உள்ள Integration என்ற சொல்லிற்கு முழுமையாக்கம் ஒருமைப்பாடு, பல்வேறுபட்ட சமுதாயத்தை ஒரே முழு அமைப்பாக பகுத்தமைக்கும் செயல் என்று விளக்கமளிக்கிறது. ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம்.4

                         இனம், மொழி, மதம், சமயம் இவற்றில் ஒருமைப்பாட்டுக்கான சான்றுகளை தமிழ் இலக்கியங்களின் வாயிலாகக் காண்போம்.

இன வழி ஒருமைப்பாடு
                    சங்க காலத்தில் தமிழகத்தில் மேற்குக் கடற்கரைப் பகுதியைச் சேரர்கள் ஆண்டனர். தெற்குக் கடற்கரைப் பகுதியை ஒட்டிப் பாண்டியர் ஆண்டனர். கிழக்குக் கடற்கரை வடக்குப் பகுதியை சோழர்கள் ஆண்டனர். இடைப்பட்ட பல பகுதிகளில் குறுநில மன்னர்களாகிய பாரி, காரி, ஓரி, அதியமான், ஆய், பேகன் போன்றோர் ஆண்டனர். நாட்டில் கலைஞர்களும் புலவர்களும் இருந்தனர். அவர்களையெல்லாம் குறுநில மன்னர்களும், பேரரசர்களும் பாதுகாத்து, வந்தவர்க்கு இல்லை என்னாது வரையாது கொடுத்தனர்.
              காலத்தால் முந்தியது சங்க இலக்கியம். அக்காலத்திலேயே இந்திய நாடு முழுவதையும் ஒன்றாகக் கருதினர் தமிழர்கள். சங்க இலக்கியமும், சிலப்பதிகாரக் காப்பியமும் இந்திய நாட்டை நாவலந் தண்பொழில் என்று குறிப்பிடுகின்றன.

       நாவல்அம் தண்பொழில் வீவு இன்று விளங்க 5

நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்று 6

                    தமிழ் மன்னர்கள் பாரதம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆண்டதாக சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

          குமரியொடு வடவிமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட7

                “தமது செல்வாக்கால் இந்திய ஒருமைப்பாடு கண்ட பெருமை ஆங்கிலேயர் ஆட்சிக்கு நெடுநாட்களுக்கு முன்னரே தமிழ் அரசர்களிடம் இருந்தது”.8

            மலைநாட்டவர், கடல்பகுதியினர், மருதநிலத்தவர், காடுகளில் வாழ்வோர் என்று நான்கு நிலப்பகுதிளில் வாழ்ந்த இனமக்கள் தொழிலால் வேறுபட்டாலும் ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்ததாக சங்க இலக்கியம் காட்டுகிறது.

 நாடன் என்கோ? ஊரன் என்கோ?
       பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?
                 யாங்ஙனம் மொழிகோ, ஓங்குவாட் கோதையை 9

             மலை நாட்டவன் மற்ற மூன்று நிலத்திற்குக் கூட தலைவனாகி பெருமை பெறுகிறான் என்பது இதன் பொருள்.

                     தமிழில்  பெருங்காப்பியமான கம்பஇராமாயணத்தில் காப்பிய நாயகன் இராமன் நாவாய் வேட்டுவன் குகனையும் குரக்கினத்தைச் சார்ந்த சுக்ரீவனையும் சகோதரர்களாக ஏற்றுக் கொண்ட செயல் இன ஒருமைப்பாட்டிற்கு அருமையான இலக்கியச் சான்றாகும்.

                பிற்காலத்தில் பாரதியின் வரிகளில் நம் நாட்டின் இன வழி ஒருமைப்பாட்டை உணர்ந்து அனுபவிக்கிறோம்.

  முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
\                     ஒப்பில்லாத சமுதாயம்
                      உலகத்திற்கொரு புதமை 10

மொழி வழி ஒருமைப்பாடு
              சமூகத்தில் மக்களை ஒருங்கிணைப்பதற்கு உதவும் கருவிகளாகத் தான் இனம், மொழி, மதம், சமயம் இவை தோன்றின. ஆனால் மக்களை ஒருமைப்படுத்த வேண்டிய அவையே மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் அசுர சக்திகளாக மாறி ஆட்டிப் படைப்பது தான் கொடுமை.

“செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்”11 என்று செம்மாந்து பாடினான் பாரதி

                “எந்தம் மொழிகள் இந்திய மொழிகள் என்ற சொந்தத்திலே சிந்தனை ஒன்றுடையாள் என்றதை வளமாக்கி வலுவூட்ட வேண்டும். அத்தனை இந்திய மொழிகளும் போற்றி வளர்ப்பது அடிப்படையில் இந்திய எண்ணம்; ஆதார இந்தியச் சிந்தனை பாரத உணர்வே பண்ணின் சுருதி பதினெட்டு மொழிகளும் இராகங்கள்”12 என்கிறார் கா.திரவியம்.

                   தமிழக வாணிகர் வேறு நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தனர். அங்குள்ள வாணிகர் தமிழகம் வந்து தங்கினர். அரபு வாணிகரும் யவன வாணிகரும் தமிழகத் துறைமுகப் பட்டினங்களில் வதிந்தனர். கன்னடர், துளுவர், சேர நாட்டினர் போன்ற வேறு வேறு மொழி பேசுவோரும் இங்கு ஒருங்கிணைந்து வாழ்ந்தனர். மொழிகளின் ஒருமைப்பாடு நிலவியது.

                    சிலப்பதிகாரமும் பட்டினப்பாலையும் இங்கு மொழி பல இருந்ததை சுட்டிக் காட்டுகின்றன:
 பயனற வறியா யவனர் இருக்கையும்
 கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள்
  கலந்தினி துறையும் இலங்குநீர் வரைப்பும் 13

மொழி பெயர் தேயத்தோர் ஒழியா விளக்கம் 14

மொழி பல பெருகிய பழநீர் தேஎத்துப்
  புலம்பெ\யர் மாக்கள் கலந்தினி துறையும்
                  முட்டாச் சிறப்பிற் பட்டினம்.15

புதுமைக் கவி பாரதியும்

 சிந்துநதியின்மிசைநிலவினிலே 
  சேரநன்னாட்டிளம்பெண்களுடனே
 
   சுந்தரத்தெலுங்கினிற்பாட்டிசைத்துத்
 
         தோணிகளோட்டிவிளை யாடிவருவோம்.
16

என்று மொழியால் இணைந்த தேசிய ஒருமைப்பாட்டை  கவிதைச் சித்திரமாகத் தீட்டியுள்ளார்.

சமய வழி ஒருமைப்பாடு
             மதுரையில் சிவனுக்கும் முருகனுக்கும் கோயில்கள் இருந்தன. அதோடு “பௌத்தப் பள்ளியில் பௌத்த பிக்குகள் இருந்து அறவுரை கூறினர். சமணப் பள்ளியில் சமண முனிவர் இருந்து அறவுரை ஆற்றினர் என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.17 எல்லா மதங்களும் எல்லா சமயங்களும் ஒருங்கிணைந்திருந்தது நமது தமிழ்ச்சமுதாயம் என்பதற்கு சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் பிற்கால இலக்கியங்களிலும் அளவிறந்த சான்றுகள் உள்ளன.”.

மகாகவி பாரதி ஒன்றே சாதி என்பதை இப்படிப் பாடியுள்ளார்

          சாதிக் கொடுமைகள் வேண்டாம், -- அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
        ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; -- தொழில்
 ஆயிரம் மாண்புறச் செய்வோம்
.18

முடிவுரை
        தமிழ் இலக்கிய உலகில் தேசிய ஒருமைப்பாட்டுச் சிந்தனைகள் காலந்தோறும் நிலவி வந்துள்ளன. சங்க இலக்கியங்களிலிருந்து பாரதியார் வரை, அதற்குப் பின்னும் பாரதிதாசன் முதல் இன்றைய இலக்கியங்கள் வரை தொடர்ந்து ஒருமைப்பாட்டுச் சிந்தனைகள் சங்கிலித் தொடராக வந்து கொண்டிருக்கின்றன. சங்கஇலக்கியம் சிலப்பதிகாரம் பாரதியார் பாடல்களிலிருந்து இக்கட்டுரையில் சுட்டியிருப்பது ஒரு சிறு துளியே. தமிழ் இலக்கியக் கடலில் மூழ்கி முத்தெடுக்க வேண்டிய ஒருமைப்பாட்டுச் சிந்தனைகள் பெருமளவில் உள்ளன அவற்றையும் அறிதல் தமிழரின் கடமை ஆகும்.



ஆனந்த விகடனில் வெளியான மறைமலைராமசாமியின் நகைச்சுவை கட்டுரை


ஆனந்த விகடனில் வெளியான மறைமலைராமசாமி அவர்கள் எழுதிய நகைச்சுவை துணுக்குகள்


Saturday, February 24, 2018

பயண இலக்கியம் காட்டும் தமிழர் பண்பாட்டு நெறிகள்

தமிழர் பண்பாட்டின் சிறப்பை தனிநாயகஅடிகளாரைப் போல் தெளிவுற விளக்கும் ஆற்றல் பெற்றார் வேறு எவரும் இலர். இன்று நாம் பண்பாடு எனும் சொல்லால் குறிப்பிடும் துறைகளை நம் முன்னோர் பண்பு, பண்புடைமை, சால்பு, சான்றாண்மை முதலிய சொற்களால் குறித்துள்ளனர்” . . . . “தமிழ்ச் சொல்லாகிய பண்பு என்பது நிலத்தைப் பண்படுத்துவதிலிருந்து தோன்றி இருக்க வேண்டும். உழவுத் தொழில் எவ்வாறு நிலத்தைப் பண்படுத்துகிறதோ அவ்வாறே மனத்தையும் மக்களையும் பண்படுத்துவது பண்பு இச்சொல்லைத் தான் பண்பாடு என்னும் பொருளில் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் நூலாசிரியர் பயன்படுத்தியுள்ளார்.” என்று தனிநாயக அடிகள் விளக்குகிறார்.1
   ‘பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்’2 என்று விளக்குகிறது கலித்தொகை.
 ‘பண்புடையார்ப்பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
             மண்புக்கு மாய்வது மன்’‑3
என்பது குறள்.
                ‘’மனித  இனங்களில் மிகத் தொன்மையானது தமிழர் இனமே என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுள்ளனர் இந்தத் தொன்மையினால் மாத்திரம் தமிழர்களுக்குப் பெருமை வந்துவிடாது. சிறந்த கோட்பாடுகளையும் உயர்ந்த கலைகளையும் பாராட்டுதற்குரிய பண்புகளையும் போற்றுதற்குரிய குறிகோள்களையும் வாழையடி வாழையாக சுடர்விட்டு வளர்த்து வந்த தொன்மையாக இருப்பதால் எல்லோராலும் மதிக்கப்படுகிறது.”4 என்பது நீதியரசர் மு.மு. இஸ்மாயில் அவர்களின் கருத்து’

                 “தமிழ் வணிகர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் தமது வாணிகத்தைப் பெருக்கிய போது தம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் விதைத்து வந்தனர். தமிழகத்து லிங்க வணக்கம் சுமேரியா, எகிப்து, மால்டா கிரீஸ் முதலிய இடங்களில் காணப்படுகின்றன”5 என்கிறார் டாக்டர் மா.இராசமாணிக்கனார்.

             “கி.பி. 1950 இல் தமது குறிப்பு நூலை வரைந்த தாலமி என்பவர் தமிழகத்தைப் பற்றி மிகுதியான விவரங்களை தந்துள்ளார். அவர் தென்னிந்தியாவைப் பார்க்கவில்லை. ஆயினும் தென்னிந்தியாவில் தங்கியிருந்த தம்மவர் கூறியவற்றை விவரமாக எழுதியுள்ளார்.”6 அதில்                               தமிழ்நாட்டுப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் குறிப்பிடும் பல பகுதிகள் உள்ளன. இது பயண இலக்கியம் நமக்கு அளித்த பண்பாட்டுக் குடையாகும்.

                  “தமிழர் நம்முடைய நாட்டில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் சென்று தம்முடைய பண்பாட்டையும் பிற நாட்டுச் செல்வத்தையும் வளர்த்து வருவதே அவரது சிறப்பு”7. என்றும் . . . .  “தமிழர்கள் உலகத்தில் இருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தில் திரியவில்லை. திரை கடல் ஓடித் தம் பண்பாட்டை உலகப் பண்பாடாக வளர்த்து வந்தார்கள்.”8என்கிறார் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.

              “இன்று உலகில் 150 – ற்கும் மேற்பட்ட தனிநாடுகள் உள்ளன. இவற்றில் 50 – க்கு மேற்பட்ட நாடுகள் தமிழோடும் தமிழரோடும் தமிழ்ப் பண்பாட்டோடும் தொடர்புடையன. . . . . இந்த நாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பாலோர் அவர்கள் வாழும் நாடுகளையே தங்கள் தாய்நாடுகளாக ஏற்றுக் கொண்டவர்கள் ஆனால் அவர்கள் எல்லோராலும் அந்தந்த நாட்டு மொழிகளை தங்கள் தாய்மொழிகளாகவும் அந்தந்த நாட்டுப் பண்பாடுகளைத் தங்கள் தாய்ப் பண்பாடுகளாகவும் முழுதாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. தமிழ்ப் பண்பாட்டோடும் தமிழகத்தோடும் தங்களுக்கு நிலையான தொடர்புக்கு வாய்ப்பு வேண்டுமென்றும் விரும்புகிறார்கள்”9.என்று கூறுகிறார்.  டாக்டர் பொற்கோ

                தமிழர் வாழும் வெளிநாடுகளில் நிலவும் தமிழ்ப் பண்பாட்டு கூறுகளை நாம் அறிவதற்கு சாளரமாக விளங்குவது பயண இலக்கியங்களே ஆகும். பயண இலக்கியங்கள் காட்டும் தமிழ்ப் பண்பாட்டுச் சாயல்களை இக்கட்டுரை வாயிலாக ஓரளவு அறியலாம்.

                    “பண்பாடு என்றால் ஓர் இனத்தாரின் கொள்கை, கோட்பாடு, நோக்கம் இலட்சியம் வாழ்க்கைமுறை பழக்கவழக்கம் சமூகச் சட்டம் சமயம் வழிபாட்டுமுறை இலக்கியமரபு அரசியல்அமைப்பு, ஆடைஅணிகலன் திருவிழா, உணவு பொழுதுபோக்கு, விளையாட்டு ஆகியவற்றையெல்லாம் குறிக்கும்”10 என்று பண்பாடு வெளிப்படும் தளங்களை பட்டியலிடுகிறார் தனிநாயக அடிகள்

                  மேலை நாடுகளுக்கு நம் நாட்டிலிருந்து தமிழர்கள் செல்லும் நிகழ்வு 19 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் நடைபெறுகிறது. துவக்க நாட்களில் மருத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் மேற்படிப்புக்காக மேலை நாடுகளுக்கு குறிப்பாக இங்கிலாந்திற்கு தமிழர்கள் சென்று திரும்பினர். அங்கேயே குடியேறும் வாய்ப்புக்கள் மிகச் சமீப காலங்களில் தான் ஏற்பட்டன. அதனால் அந்த நாடுகளில் தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையான அடையாளங்கள் இருப்பதாகக் கூற முடியாது. ஆனால் கீழை நாடுகளுக்கு மிகப் பழங்காலங்களில் தமிழர்கள் சென்று அங்கேயே தங்கி வாழ்ந்ததால் அங்கே நமது பண்பாட்டுச் சின்னங்களும் நெறிகளும் நின்று நிலவ தொடங்கின. இலங்கை, பிஜீதீவு, மலேயா, தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களுக்கு தொழிலாளர்களாக சென்ற தமிழர்கள் நமது பண்பாட்டை மறவாமல் காத்து வருகின்ற தன்மையைப் பயண இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.
                  தமிழ்ப் பயண இலக்கியத் தந்தை என்று போற்றப்படும் ஏ.கே.செட்டியார் சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் பிஜீத் தீவுக்கு சென்ற போது அங்குள்ள தமிழர்கள் வாழ்வியலில் தமிழ்ப் பண்பாட்டின் சாயல்கள் வேரோடி இருப்பதை கண்டார். பிஜீத் தீவின் தலைநகரம் சுவாவில் ஆண்டுதோறும் நடக்கும் முக்கியமான நிகழ்ச்சி மாரியம்மன் தீமிதி உற்சவம். அம்மாதிரியான கோவில்கள் முப்பதுக்கு மேல் இருந்தன. காவடியெடுத்தல், கரகமாடுதல், அலகு குத்திக் கொள்ளுதல், தீமிதித்தல் முதலிய சடங்குகளை செய்து வந்தனர். தேவாரம், திருவாசகம், வேதாந்தப் பாடல்கள் எல்லாம் பாடப்பட்டன. இரவு தமிழில் தெருக்கூத்து நடைபெற்றது.இதைப் பற்றிச் சொல்லும் போது “தமிழ்நாட்டு கிராமம் ஒன்றில் நடைபெறும் உற்சவம் போலவே இருந்தது. தாய்நாட்டை விட்டு பத்தாயிரம் மைல் தூரத்திற்கு அப்பால் அம்மாதிரி காட்சியைக் கண்டது மிகவும் மகிழ்ச்சி அளித்தது”11 என்கிறார் ஏ.கே.செட்டியார்

             ஏ.கே.செட்டியார் பிஜீதீவில் பூர்வ குடியைச் சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு விருந்தினராகச் சென்ற போது அவர் உட்காருவதற்கு தடுக்குப்பாய் போட்டனர் . சாப்பிட்ட பொழுது அந்த வீட்டுக்காரர் பக்கத்தில் உட்கார்ந்து உரையாடினார். பரிமாறிய பொழுது பெண்கள் மிகவும் பணிவோடு உபசரித்தார்கள். தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இது போன்ற உபசரிப்பு நடைபெறுவது கண்கூடு. விருந்தினரை உபசரிப்பதற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் வந்து கூடிவிட்டார்கள் என்பதை ஏ.கே.செட்டியார் பதிவு செய்துள்ளார்.12 இது தமிழகக் கிராமங்களில் நிலவும் பண்பாடாகும்                                      .
                     தமிழரின் அடையாளமான பொங்கல் விழாவும் பாலித் தீவிலும் கொண்டாடப்படுகிறது. தமது பயணக் கட்டுரையில் தாம் கலந்து கொண்ட ஒரு பொங்கல் நிகழ்ச்சியை ஏ.கே.செட்டியார் விளக்கி இருப்பதிலிருந்து தமிழ்ப் பண்பாடு பல்வேறு கோணங்களில் அந்நாட்டில் கடைப்பிடிக்கப்படுவதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. “கிராமத்தில் ஒரு வீட்டின் முன்புறமுள்ள தோட்டத்தில் பொங்கலிட்டு சூரியனுக்குப் படைத்துக் கொண்டிருந்தார்கள். வீட்டின் முன்புறத்தில் இலைகளால் அழகாகத் தோரணம் கட்டியிருந்தார்கள். நன்றாகக் கூட்டி மெழுகிய இடத்தில் கோலமிட்டு பானையில் பொங்கலிட்டார்கள். அடுப்புக்கு எதிரே மூன்று வாழை இலைகளைப் போட்டு அதில் பரிமாறி இருந்தனர். காய்கறி வகைகள் வாழைப்பழம், சர்க்கரை முதலியவற்றை படைத்திருந்தார்கள். குடும்பத்தினர் அனைவரும் படைப்புக்கு முன் தண்ணீர் தெளித்து கீழே விழுந்து வணங்கினர்13 இது நமது பொங்கல் விழா நிகழ்வுகளை கண் முன் கொண்டு வருகிறது.

                             ஜெர்மனியில் ஒரு பல்கலைக்கழகத் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்த பைத்தான் சாஸ்திரியை தமது பயணத்தின் போது பெர்லின் நகரில் ஏ.கே.செட்டியார் சந்தித்தார். சாஸ்திரி எட்டு வருடங்கள் தமிழ்நாட்டில் தங்கியிருந்து முறையாகத் தமிழ்ப் பயின்றவர். அவரது வீட்டில் தமிழ்நாட்டுப் படங்கள் தமிழகத்தில் பயன்படுத்தபடும் கூஜா, மணி முதலிய பழம்பொருள்களையும் ஏராளமான தமிழ்ப் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் கண்டு வியந்ததாக ஏ.கே.செட்டியார் குறிப்பிட்டுள்ளார்.14 பைத்தான் சாஸ்திரி தமிழ்க் கதைகள் சிலவற்றை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்திருந்தார் பாரதியாரின் நூல்களிலே சாஸ்திரிக்குப் பேரார்வம்.

                 புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் லட்சுமி அவர்கள் தென்னாப்பிரிக்காவில் பல ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றி தாயகம் திரும்பிய பின் தமது அனுபவங்களைப் பயண இலக்கியமாகப் பதிவு செய்துள்ளார்.15 டர்பன் நகரில் மட்டும் 80000 இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். தென்னாப்பிரிக்காவில் வசிக்கையில் சில தமிழ்ப் பெண்கள் பாரதி பாடல்களைப் பாடிய பொழுது தமது உள்ளம் குளிர்ந்ததாக லட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

                   டர்பன் நகருக்குச் சற்றுத் தொலைவில் கடற்கரையில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நான்கு நாட்கள் பெரிய விழா நடக்கிறது. திருவிழாக்களில் நம் நாட்டில் காணும் இராட்டினம், தொடர்ச்சியாக ஒலி பெருக்கியில் இசைத்தட்டுப் பாடல்கள் மிட்டாய்கடைகள் பலூன்விற்பனை வளையல் கடை இவையெல்லாம் இடம்பெற்றிருந்தன. நம்முடைய உறவுகளாக தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் நிலையையும் பண்பாட்டையும் எழுத்தாளர் லட்சுமி இவ்வாறாகப் பாராட்டுகிறார். “கடல் தாண்டி அந்நிய மண்ணில் வசதியோடு வேரூன்றி விட்ட நமது மக்கள் தங்கள் தாய்நாட்டை மறக்கவில்லை. நமது கலாச்சாரம் அவர்களுடன் அந்த மண்ணில் வேரூன்றி விட்டது.”  

             எழுத்தாளர் வாஸந்தி பிஜீ தீவில் தமது பயண அனுபவத்தை பயண நூல் வாயிலாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். “தமிழ்ப் பாடம் நடத்தப்படும் ஆரம்ப பள்ளிக்குச் சென்ற போது சின்னஞ்சிறு குரல்களின் ஒலி ஒன்றாய் உள்ளிருந்து வந்தது”16

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
                                         வாழிய வாழியவே

என்ற பாரதி பாடலைப் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் கேட்டதும் என்னுள் ஏற்பட்ட சிலிரப்பை வருணிப்பது அசாத்தியமானது”

           அண்மையில் தாய்லாந்து பயணம் மேற்கொண்ட கோவி. லெனின் “தமிழ்மொழி தாய்லாந்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. மன்னருக்கு முடி சூட்டும் போது திருக்கதவுகள் திறக்கட்டும் என்ற தமிழ் மந்திரத்தைச் சொல்லித்தான் முடிசூட்டுகிறார்களாம். அத்துடன் திருவெம்பாவையும் பாடப்படுகிறதாம் என்று சுட்டிக் காட்டுகிறார்”.17

        சில நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட கவியரசர் கண்ணதாசன் மலேசியாவைப் பற்றி கூறும் போது “சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் செட்டிநாட்டிலிருந்து மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் குடியேறிய செட்டியார்கள் அதே பழக்கவழக்கங்களையே கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்களது பெயர்களும் தமிழ்ப் பெயர்களே” என்கிறார். “மலேசியாவில் பல்வேறு நாகரிகங்களுக்கிடையே புதுமையான உலகத்தில் வாழும் தமிழ்ப் பெண்கள் பழமையான தமிழ்ப் பண்பாட்டை மறவாமல் இருக்கிறார்கள்”18 என்று  பெருமிதப்படுகிறார்.

              பயண இலக்கியம் குறித்த எனது ஆய்வின் போது நான் படித்த நூல்களில் காணப்படும் தமிழ்ப் பண்பாட்டு நெறிகளில் துளிகளே இவை. பயண இலக்கியம் காட்டும் பண்பாட்டுச் செழுமை நமக்கு வழிகாட்டியாக அமையட்டும். பயண இலக்கியங்கள் தமிழ்ப் பண்பாட்டு வெளிச்சத்தை நமக்கு காட்டும் சாளரங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது என்று கூறி என் உரையை முடிக்கிறேன்.

               

Saturday, November 19, 2016

தமிழ் உரைநடையின் வளர்ச்சி ஒரு பார்வை



முன்னுரை
  
நம்முடைய தாய்த் தமிழை முத்தமிழ் என்று வழங்கினர் நம் முன்னோர். இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்பன முத்தமிழ்ப்  பிரிவுகள் ஆகும். இயற்றமிழ் என்பது உரைநடையும் செய்யுளுமாகிய இரண்டு   நிலைகளிலும்   வளர்ந்து வருகிறது. தொடக்கத்தில் செய்யுள் வடிவிலேயே தமிழ் இலக்கியம் செல்வாக்குப் பெற்றிருந்தது.“உரைநடை என்பது வளர்ந்தது பிற்காலத்திலேயே ஆகும். உரைநடை வளர்ந்த பிறகு வரலாறு, சமயம், மருத்துவம் முதலான துறைகள் உரைநடையிலேயே எழுதப்படலாயின. அதன் பிறகே நாடகம், கதை முதலியனவும் பாட்டில் இருந்து உரைநடை வடிவம் பெற்றன.” என்று தெளிவாக விளக்குகிறார் டாக்டர் மு.வ (இலக்கிய மரபு பக் 1,2)
            தொல்காப்பியர் அக்கால இலக்கியத்தை ஏழு வகைப்படுத்தினார்.
“பாட்டிடை வைத்த  குறிப்பி  னானும்
                  பாவின்று எழுந்த கிளவியானும்
                         பொருளொடு புணராப் பொய்ம்மொழியானும்
                         பொருளொடு புணர்ந்த நகைமொழியானும்
                         உரைவகை நடையே நான்கு என மொழிப ”
                                                  (தொல் – செய்யுளியல் – 171)

            கட்டுரை, கதை, நகைச்சுவை இவற்றிற்கு உரைநடை பயன்படுத்தபட்டது. தொல்காப்பியர் குறிப்பிடும் உரைவகை நடை என்ற தொடரே பின்னாளில் உரைநடை என வழங்கலாயிற்று.

முதல் உரைநடை
               சங்கம் மருவிய காலத்தில் சேரன் தம்பி இளங்கோவடிகள் இசைத்த சிலப்பதிகாரத்தை  “ உரையிடையிட்ட பாட்டுடைச்  செய்யுள் ”  என்பர்.   ஆனால் தொடர்ந்த உரைநடையை அதில் நாம் காண முடியாது. கி.பி. 8 –ஆம் நூற்றாண்டில் தோன்றிய இறையனார் களவியல் உரையில் தான் தெளிந்த உரைநடையைக் காண முடிகிறது.
உரையாசிரியர்கள்
             இறையனார் களவியல் உரை தோற்றம் பெற்ற பின்னர் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல் 15 - ஆம் நூற்றாண்டு  வரை  உரையாசிரியர்களின்  காலமாக விளங்கியது. தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களுக்கும்,பத்துப்பாட்டு போன்ற இலக்கிய நூல்களுக்கும் அவர்கள் உரை எழுதினர். இளம்பூரணர், பேராசிரியர், உச்சி மேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர், பரிமேலழகர், சேனாவரையர் முதலியோர் உரைநடை   வளர்ச்சிக்கு ஆற்றிய   பணியை தமிழுலகம் என்றென்றும் மறவாது. சமணர்களும். வைணவர்களும் மணிப்பிரவாளம் எனப்படும் பிறமொழிக் கலப்புடன் தமிழில் உரைநடை எழுதினர்.
 கல்வெட்டு வளர்த்த உரைநடை
               தமிழ் உரைநடை வளர்ச்சியில்   கல்வெட்டுகளுக்கும் பெரும் பங்கு உண்டு. இனிய உரைநடையில் அமைந்த சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் பிற்கால உரைநடை வளர்ச்சிக்குப்  பெரிதும் உதவி   செய்தன   என்றாலும்   கல்தச்சர்கள் தமிழறிவு பெரிதும் வாய்க்கப் பெறாதவர்களாக இருந்தமை காரணமாக அவர்கள் கல்லில் பொறித்த உரைநடை பெரும்பாலும் பிழை நிறைந்ததாக  உள்ளது. அதை உரைநடை வளர்ச்சிக்கு அளவுகோலாக கொள்ள இயலாது என்கிறார் பெரியசாமி தூரன்(முன்னுரை பாரதி தமிழ் வசனத் திரட்டு)

18 –ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை 
                        ஐரோப்பியரின் வருகைக்குப் பின் உரைநடைத் தமிழுக்குச் செல்வாக்குப் பெருகியது. மத போதகர்களின் வசன நூல்கள் வெளிவரத் தொடங்கின. வீரமாமுனிவர் அவி வேக பூரண குரு கதை  (பரமார்த்த குரு கதை) வேதியர் ஒழுக்கம் ஆகிய உரைநடை நூல்களை எழுதினார்.  சிவஞான போதத்தை விளக்கும் திராவிட மகா பாடியம் என்ற நூலை இயற்றினார் சிவஞான முனிவர். “வசனநடை கை வந்த வல்லாளர்” ஆறுமுகநாவலர் தெளிவான உரைநடைக்கு முதலில் வழி காட்டியவர். இவரது நல்ல உரைநடைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவை “பெரிய புராண வசனம்”  , “திருவிளையாடல் புராண வசனம்”,    “கந்தபுராண வசனம்” முதலியவை. திருவருட்பிரகாச வள்ளலார் “மனுமுறை கண்ட வாசகம்”, “ஜீவ காருண்யம்” முதலான   உரைநடை   நூல்களை எழுதி உள்ளார். இருபதாம் நூற்றாண்டு தொடங்கிய பின்னர் பல துறைகளையும் தழுவி தமிழில் உரைநடை நூல்கள் வெளிவரலாயின. மறைமலைஅடிகள் தனித்தமிழிலும், திரு.வி.க அழகு தமிழிலும் நூல்களைப் படைத்து தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டினர். தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் எளிய, இனிய நடையில் என் சரித்திரம், நினைவு மஞ்சரி போன்ற உரைநடைச் செல்வங்களை தமிழுலகிற்கு வழங்கினார். மோனைச் சிறப்புடன் அடுக்கு மொழியாகத் தமிழைக் கையாண்டவர் டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை. அவரது படைப்புக்களில் “தமிழ் இன்பம்”, “ஊரும் பேரும்”  போன்ற உரைநடை நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவன.சிந்தனையைத் தூண்டு வன. பண்டிதமணி கதிரேசச்செட்டியார், நாவலர்  சோமசுந்தர பாரதியார், ந.மு.
வேங்கடசாமி நாட்டார்,   தெ.பொ.மீ கா.அப்பாத்துரையார் முதலியவர்கள் தமிழில் உயர்நடையைக் கையாண்டு செறிவுள்ள உரைநடை நூல்களை இயற்றி இருக்கிறார்கள். மகாகவி பாரதியார் சிறுசிறு தொடர்களைக் கையாண்டு தமிழ் உரைநடையில் புதுமையைப் புகுத்தினார்.   

நாவல் - சிறுகதை 
                           முதன்முதலாகத் தமிழுக்கு நாவல் இலக்கியத்தை அளித்தவர்   மாயூரம்வேதநாயகம் பிள்ளை அவர்   படைத்த   முதல் நாவல் பிரதாபமுதலியார் சரித்திரம்.அதைத் தொடர்ந்து ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரம் மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் ஆகியவை நாவல் வளர்ச்சிக்கு வித்திட்டன. இன்று  வரை அழியாப்  புகழுடன் நின்று நிலவும் வரலாற்று நாவல்களைக் கற்பனை கலந்து படைத்து அளித்த கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி
சரித்திர   நாவலாசிரியர்களின் முன்னோடியாக விளங்குகிறார். அகிலன், நா.பார்த்தசாரதி லஷ்மி, ஜெயகாந்தன் ஜெகசிற்பியன், சுஜாதா ஆகிய தமிழின் தலைசிறந்த நாவலாசிரியர்கள் தனித்தனி முறைகளைக் கையாண்டு மறக்க முடியாத புதினங்களை உருவாக்கினர். அவர்களைப் பின்பற்றி பல புதிய எழுத்தாளர்கள் காலந்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர்.தமிழில் சிறுகதை இலக்கியத்தை ஜீவனுள்ள இயக்கமாகத் தொடங்கி வைத்தவர் சிறுகதை மன்னன் என்று புகழப்படும் புதுமைப்பித்தன் ஆவார். கு.ப.ரா, சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன், ராஜம்கிருஷ்ணன், ஜெயகாந்தன் ஆகியோரின் கைவண்ணத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி பெற்றது; வளம் பெற்றது. ஆனால் தற்போதைய சூழலைப் பார்க்கும்போது சிறுகதை நாவல் போன்றவை அருகி வருவது போல் தோன்றுகிறது. அரசியல், மருத்துவம் விளையாட்டு,அறிவியல் போன்ற பல துறைகளிலும் வெளிவரும் கட்டுரைகளுக்கே செல்வாக்குப் பெருகி வரக் காண்கிறோம்.

ஏடுகள் வளர்த்த உரைநடை
                    செந்தமிழ், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி போன்ற தமிழ் இலக்கிய ஏடுகள் செறிவுள்ள விடயங்களை உரைநடை   வாயிலாக வெளியிட்டு தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் தொண்டு ஆற்றியுள்ளன. ஆயினும் இந்த மாசிகைகள் கடினமான நடையில் இருந்ததால் புலமை   படைத்தவர்களால் மட்டுமே படிக்கப் பட்டன. பொது மக்களைச் சென்று அடையவில்லை. அதனால் தமிழ்நாடு, தினமணி போன்ற நாளிதழ்களும் கல்கி, ஆனந்தவிகடன், போன்ற இதழ்களும் எளிய தமிழில் உரைநடையை வளர்த்து மக்களின் படிக்கும் பழக்கத்தை விரிவுபடுத்தின. ஆனால் இன்று ஆங்கிலம் கலந்த தமிழே பெரும்பாலான ஏடுகளில் கையாளப்  படுவதை வேதனையுடன் காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முடிவுரை
          மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவிஞர் கண்ணதாசன் போன்றவர்கள் தங்கள் கவிதைகளால் புகழ்பெற்றவர்கள். இவர்கள் உரைநடை இலக்கியத்தை  வளர்ப்பதிலும் பெரும் பங்கு ஆற்றியுள்ளனர். சுதேசமித்திரன், இந்தியா ஏடுகளின் வாயிலாக பாரதி அருமையான அரசியல் கட்டுரைகளை
எழுதிக் குவித்தார். பாரதிதாசனின் தமிழ் இயக்கம் குறித்த கட்டுரைகள் தமிழிர் நெஞ்சில் உரம் ஊட்டின. கண்ணதாசன் திராவிட இயக்கத்தில் இருந்த போது தமிழ் மொழி பற்றியும் தமிழர் பெருமை குறித்தும் பல உணர்ச்சி ததும்பும் கட்டுரைகளைப் படைத்துள்ளார். பின்னாளில் அவர் ஆன்மீகத்தைப் பின்பற்றிய போது அர்த்தமுள்ள இந்து மதம் போன்ற ஆன்மீகக் கட்டுரைகளைத் தனக்கே உரித்தான தனி நடையில் எழுதியுள்ளார். பேரறிஞர் அண்ணா எழுத்துத்துறையில் தொடாத பொருள் இல்லை. தொட்டு துலங்காதது எதுவுமில்லை.தம்பிக்கு என்று அவர் எழுதிய  கடிதங்கள் சமூக சீர்த்திருத்த நாடகங்கள், திரைப்படங்கள் வாயிலாக தமிழ் உரைநடையை உச்சத் திற்குக் கொண்டு சென்றார். கருத்துக்களை எளிதில் சொல்வதற்கேற்ற சிறந்த கருவி உரைநடையே படிப்போரும் உரைநடையை எளிதில் புரிந்து கொள்வர் அதனால் உரை நடையே இன்று எம்மொழியிலும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது.
சிறந்த வசன நடை எழுதுவதற்கு இலக்கணம் பயன்பட மாட்டாது என ஒதுக்குதல் தவறு வசன நடையும் இலக்கணத்திற்கு உட்பட்டதே ஆகும்”.
என்பது எஸ்.வையாபுரிப் பிள்ளையின் கருத்து (தமிழின் மறுமலர்ச்சி பக் - 115)  இலக்கணத்திற்கு உட்பட்ட சிறந்த உரைநடையைக் கையாள டாக்டர் மு.வ, டாக்டர்.சி.பா, போன்ற தமிழறிஞர்களின் கட்டுரைகளை முன்னோடியாகக் கொள்ள வேண்டும். எம்மொழியாம் செம்மொழித் தமிழில் உரைநடை இலக்கியம் துறை தோறும்   துறைதோறும்  வளர்ந்து புதுவகை நூல்களை உருவாக்கும் என்பதில் அய்யமில்லை.