Powered By Blogger

Tuesday, June 16, 2015

சென்னை 38-வது புத்தக கண்காட்சியில் 18-01-2015 அன்று நடைபெற்ற மணிமேகலைப் பிரசுர நூல்கள் வெளியீட்டு விழாவில் “தமிழை வளர்த்த முக்கியத் தமிழ் அறிஞர்கள் நூல் வெளியிடும் நிகழ்ச்சியின் புகைப்படங்கள்.



Thursday, February 12, 2015

தமிழில் பயண இலக்கியம்



முன்னுரை
        தமிழுக்குப் பயண இலக்கியம் என்பது புதுவரவு அன்று. சங்க காலம் தொட்டே பயணம் பற்றிய குறிப்புகளும்,செய்திகளும் தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. காப்பியங்களிலும்  பல்வேறு  பயணங்கள்  விவரிக்கப் பட்டுள்ளன. பண்டைக்  காலத்திலேயே தமிழரின் கடற்பயணம் தொடங்கி விட்டது. வெளிநாடுகளுடன் கொண்ட வணிகத் தொடர்பால் கடல் வழியாக கலங்களில் ஏறி  பிற நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்யவும் அந்நாடு களிலிருந்து   கடல்  வழியே  வரும் பொருட்களை வாங்கிச் சேமிக்கவும் தமிழகக்  கடற்கரைகளில்  பெரியதும் சிறியதுமாக பல துறைமுகங்கள் அமைக்கப்பட்டன. தரை வழியாகவும்  கடல் வழியாகவும் பயணம் மேற் கொண்ட தமிழர்கள் பின்னாளில் வானவூர்தி வாயிலாகப் பயணத்தைத் தொடர்ந்தனர்.ஒவ்வொரு காலகட்டத்திலும் தாங்கள் மேற்கொண்ட பயண அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்பி அவற்றைப் பதிவு செய்யத் தவறவில்லை.துவக்க காலத்தில் தங்கள் எண்ணங்களை ஏட்டில் எழுதி வைத்தனர்.
            அச்சிடும் முறை வழக்கத்திற்கு வந்த பின் அந்த அனுபவங்கள் நூல்களாக வெளியிடப்பட்டன. சங்ககாலம் தொடங்கி இன்று வரை தமிழில் பயண இலக்கியம் வளர்ந்த வரலாற்றைச் சுருக்கமாகக் காண்போம். இக்கட்டுரை வாயிலாகப் பயண வரலாற்றில் ஏற்பட்டுள்ள நவீன உத்தி களையும் மாற்றங்களையும் அறிந்திடச் செய்வதே இந்த முயற்சியின் நோக்கம்.



சங்க இலக்கியத்தில் பயணச் செய்திகள்
                           தமிழ் இலக்கியம், சங்க கால இலக்கியம் ,இடைக்கால இலக்கியம், பிற்கால இலக்கியம் என மூவகைப்படும்.அச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட இலக்கிய நூல்களும் பலவாகும் என்பது  தொல்காப்பியம் என்னும் பேரிலக்கணத்தாலும் அதன் உரைகளாலும், சிலப்பதிகாரம் யாப்பருங்கலம், இறையனார்களவியல் ஆகியவற்றின் உரைகளாலும் அறியப்படும்  தொல்காப்பியர் காலத்தில் பயணம் என்ற சொல் வழங்கப்படவில்லை. “செலவு” என்ற சொல்லே பயணத்தைக் குறிக்கும் சொல்லாக வழக்கத்தில் இருந்தது.
               “செலவினும் வரவினுந் தரவினுங் கொடையினு
                நிலை பெறத் தோன்று மந்நாற் சொல்லுந்
                தன்மை முன்னிலை படர்க்கை யென்று
                அம்மூவிடத்து முரிய வென்ப”
இந்நூற்பாவில் செலவு என்பது பயணம் என்ற பொருளில் வந்துள்ளது.
                    
                     சங்க காலத் தமிழ் மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளப்  பத்துப்பாட்டு இலக்கியத்தைப் பயின்றால் போதும். “பத்துப்பாட்டு கற்பனைகளும், கதைகளும் நிறைந்த காவியமன்று.கண்ணால் கண்ட காட்சி களை அப்படியே அழகாக எழுதியிருக்கும் சொல்லோவியமாகும்.”  என்று தமழறிஞர் சாமி சிதம்பரனார் குறிப்பிடுகிறார். பத்துப்பாட்டில் ஐந்து பாடல்கள் ஆற்றுப்படை இலக்கியங்கள். பரிசு பெற்று வந்த ஒருவன் பரிசு பெற நாடிச் செல்லும் மற்றொருவனுக்கு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படையாகும். புலவராற்றுப்படை என்னும் திருமுருகாற்றுப்படையில் மந்திகள் கூட அணுக முடியாத உயர்ந்த மரங்கள் நிறைந்த மலைகளில் வண்டுகள் கூட மொய்க்க இயலாத காந்தள் மலர்களைப் பறித்து மாலையாகத் தலையில் அணிந்துள்ள முருகப் பெருமானை வருணிக்கும் புலவர் நக்கீரனார் இயற்கையோடு இயைந்த மலைகளையும், மரங்களையும், மலர்களையும் நேரில் சென்று கண்டு எழுதியுள்ளார்.
                 “மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து
                   சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
                   பெருந் தண் கண்ணி மிலைந்த சென்னியன்

           இப்படிப் பல அழகிய காட்சிகளைக் காண்பதற்காகப் புலவர்கள் நாட்டில் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கியமும் பின்னர் வந்த இலக்கியங்களும் நமக்குக் காட்டுகின்றன.

                சிறுபாணாற்றுப்படையில் சேர, சோழ, பாண்டிய நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும் பற்றிய செய்திகளோடு ஓய்மா நாட்டுக் கடற் கரை, முல்லை நிலம் பற்றிய செய்திகளும், எயிற்பட்டினம், வேலூர், ஆமூர், கிடங்கில்,மாவிலங்கை ஆகிய ஊர்கள் பற்றிய விவரங்களும் கூறப் பட்டுள்ளன.
            பெரும்பாணாற்றுப்படையில் வறிய பெரும்பாணன் காஞ்சி நோக்கி புறப்படும் இடத்திலிருந்து தொண்டை நாட்டுக் கடற்கரைப் பட்டினத்திற்குச் செல்லும் வழி, அங்கிருந்து காஞ்சிக்குச் செல்லும் வழி இவ்விரு வழிகளிலும் உள்ள நில அமைப்புப் பெருவழிகள் பல வகை நிலங்களிலும் வாழும் மக்களின் உணவு, உடை, உறையுள், தொழில்கள்\, உள்நாட்டுவாணிகம், கடல்வாணிகம் இன்னபிறவும் இடம்பெற்றுள்ளன.அதைப் போலவே சங்க காலப் பாண்டிநாட்டையும் அதன் தலைநகரான மதுரை யையும் மக்கள் வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகிறது மதுரைக் காஞ்சி என்னும் பத்துப்பாட்டு நூல்.
   
                பல்வேறு சங்கப் புலவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பாடி வைத்த தனிப் பாடல்கள் திணை வாரியாகவும், துறை வாரியாகவும், பொருள் அடிப்படையிலும்  எட்டுத்தொகை நூல்களாகத்  தொகுக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடல்களை யாத்த புலவர்கள் நாடெங்கும் சுற்றித் திரிந்து தாம் கண்ட காட்சி களையும், அறிந்த செய்திகளையும் சிறந்த செய்யுட்களாகப் பதிவு செய்து உள்ளனர். இதற்காக அவர்கள் மேற்கொண்ட பயணங்களில் பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடுகளே இந்த உன்னதப் பாடல்கள்.
   “சுள்ளிஅம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
                  யவனர் தந்த வினை மாண் நன் கலம்
                  பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
                  வளம் கெழு முசிறி”
யவனர் கொண்டு வந்த நல்ல மரக்கலம் பொன்னுடன் வந்து மிளகுடனே மீண்டு செல்லும் இத்தகைய வளம் வாய்ந்தது முசிறி என்ற பட்டினம். இது போன்று பல புலவர்கள் தங்கள் பாடல்களில் பதிவு செய்துள்ள பயணக் குறிப்புகளிலிருந்து பல வரலாற்றுச் செய்திகளை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

காப்பியங்களில் பயணக் குறிப்புகள்
      பயண இலக்கிய வரலாற்றில் அடுத்துத் தடம் பதித்தவை காப்பியங்கள்  எனலாம். தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்களில் முழுமையாகக் கிடைத் துள்ள சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய காப்பியங்களில் காப்பியத் தலைவன் வணிகம், போர் தூது ஆகிய காரணங்களுக்காகவும் பல இடங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலும் பயணம் மேற் கொள்கிறான். சிலப்பதிகாரக்கதை புகாரில் தொடங்கி மதுரையில் நடந்து வஞ்சியில் முடிகிறது. புகார்க் காண்டத்தில் காவிரிப் பூம்பட்டினத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒரு சுற்றுலா வழிகாட்டியைப் போல் நமக்கு விளக்கிக் காட்டும் இளங்கோவடிகள் நாடுகாண் காதையில் கவுந்தியடிகள் வாயிலாக சோழ நாட்டுப் பகுதிகளையும், காடுகாண் காதையில் மாங்காட்டு மறையோன் வாயிலாக மதுரை செல்லும் வழிகளையும் விரிவாக விளக்கிக் கூறுகிறார்.
           மணிமேகலைக் காப்பியத்தில் சாவகத் தீவில் உணவின்றி மக்கள் இறந்ததால் அவர்களின் பசிப்பிணியைப் போக்குவதற்காக அமுதசுரபியுடன் ஆபுத்திரன் சாவகத் தீவிற்குச் சென்றான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

          சீவகசிந்தாமணிக் காப்பியத்தின் நாயகனான சீவகன் பல்வேறு இடங்களுக்குத் தரைவழியாகவும் வான்வழியாகவும் சென்று வருகிறான். தமிழ்க் காப்பியங்களில் பெருங்காப்பியமாக விளங்கும் கம்பராமாயணத்தில் இராமாயணக்கதை நடைபெறும் இடங்களையும், மலைகளையும் ஆறு களையும்  தமிழ்நாட்டு  இடங்கள், மலைகள் ,ஆறுகள் இவற்றோடு
ஒப்பிட்டுப் பாடுகிறார் கம்பர்.
     “பூவிரி பொலன் கழல், பொரு இல் தானையான்,
                காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ,
                தாவர சங்கமம் என்னும் தன்மைய
                யாவையும் இரங்கிட, கங்கை எய்தினான்”

தற்காலப் பயண இலக்கியங்கள்
                        வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வந்த பயண அனுபவங்களைச் சுவையுடன்  எழுதி அவற்றைப் படிப்போர் அப்பயணத்தைத் தாமே அனுபவித்தாற் போன்ற மகிழ்ச்சியையும், அனுபவத்தையும் பொது அறிவையும் பெறும்படி செய்வது பயணக் கட்டுரையின் நோக்கமாகும்.
“செங்கோன் தரைச்செலவு” தமிழில் பயண இலக்கியத்திற்கு முன்னோடியான நூல் என்று கருதப்படுகிறது. அடுத்து  “தகடூர்யாத்திரை” என்றொரு பயண நூல் இருந்ததாகத் தெரிகிறது. \
        தமிழ்த்தென்றல் திரு.வி.க எழுதியுள்ள இலங்கைச் செலவு என்ற கட்டுரையும் டாக்டர் மு.வவின்  பயண அனுபவங்களை விளக்கும் “யான் கண்ட இலங்கை”என்ற நூலும் தற்காலப் பயண இலக்கியங்கள் உருவாகப் பாதை அமைத்தவை என்று கூறினால் அது மிகையாகாது.
    பயண இலக்கியத்தின் தந்தை எனவும் உலகம் சுற்றிய தமிழன் எனவும் போற்றப்படும் ஏ.கே.செட்டியார் 1850 முதல் 1965 வரை வெளியான பயணக் கட்டுரைகளைத் தொகுத்து “தமிழ்நாடு பயணக் கட்டுரைகள்” என்ற நூலாக வெளியிட்டார். 19 –ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழின் முதல் பயண நூல் வெளியானது. இந்நூலின் தலைப்பு “இந்திய திவ்ய தேச யாத்திரை” ஆகும். இதனை வெளியிட்டவர் சேலம் பகடலு நரசிம்மலு நாயுடு. 1941 –இல் ஏ.எஸ்.பஞ்சாபகேச ஐயர் தமது மேல்நாட்டுப் பயண அனுபவங்களை இந்தியாவின் மேல் நாட்டு அனுபவங்கள் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். 1942 –இல் பிரயாண நினைவுகள் என்ற நூலையும் 1943 –இல் பிரயாணம் செய்யுங்கள்  என்ற   நூலையும்  எழுதி  வெளியிட்டார் ஏ.கே.செட்டியார். அமரர் கல்கி இலங்கைக்குப் பயணம் செய்து தமது அனுபங்களை ஆனந்தவிகடன் இதழில் தொடராக வெளியிட்டார். அவருக்குப் பின் தேவன் “ஐந்து நாடுகளில் அறுபது நாட்கள்  என்று தமது பயண அனுபங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார். மீ.ப.சோமு தமது இங்கிலாந்துப் பயண அனுபவங்களை “அக்கரைச் சீமையில்ஆறு மாதம்” என்ற தலைப்பில் கல்கி வார இதழில் தொடராக எழுதினார். பின்னர் அது நூலாக வெளிவந்தது.
1966 –இல் வாசகர் வட்டம் பதினொரு ஆசிரியர்கள் எழுதிய பயணக் கட்டுரைகளின் தொகுப்பை “பிரயாண இலக்கியம்” என்ற தலைப்பில் வெளியிட்டது. ஏ.கே.செட்டியாருக்கு முன் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும் அவர்களுக்கும் ஏ.கே.செட்டியாருக்கும் ஒரு வேறுபாடு உண்டு. ஏ.கே.செட்டியார் தமிழன் என்ற கண்ணோட்டத்துடன் பல நாடுகளையும் பார்த்தார் என்ற கருத்து குறிப்படத்தக்கது. அவர் எழுதிய சிறந்த பயண நூல்கள் வருமாறு:
1.   தமிழ்நாடு பயணக் கட்டுரைகள்
2.   உலகம் சுற்றிய தமிழன்
3.   பிரயாண நினைவுகள்
4.   மலாயா முதல் கனடா வரை
5.   கரீபியன் கடலும் கயானாவும்
6.   அமெரிக்க நாட்டிலே
7.   அண்ணல் அடிச்சுவட்டில்

தி.ஜானகிராமன் எழுதிய “கருங்கடலும் கலைக்கடலும்” சுஜாதாவின்
“60 அமெரிக்க நாட்கள்” லேனாதமிழ்வாணனின் “தமிழைத் தேடி ஒரு பயணம்”, “ஒரு பத்திரிகையாளனின் மேலை நாட்டுப் பயண அனுபவங்கள்”, “ஒரு பத்திரிகையாளனின் கீழை நாட்டுப் பயண அனுபங்கள்,” “துபாய் அழைக்கிறது”, “கண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு” முதலிய பயண நூல்கள்  பெரியவர் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் விரும்பிப் படிக்கும் வகையில் சுவைபட எழுதப் பட்டுள்ளன. அவர் தமது பயணத்தில் படிக்கும் வாசகர்களையும் உடன் அழைத்துச் செல்வது போன்ற எண்ணத்தை உருவாக்கி விடுகிறார். மணியணின் இதயம் பேசுகிறது பயணக் கட்டுரைகள் தமிழ் மக்களால் விரும்பிப் படிக்கப்பட்டவை.

முடிவுரை
       பயண இலக்கியம் என்ற துறை  தமிழுக்குப் புதியதன்று. பயண இலக்கியம் என்ற பொருளில் ஆனால் வேறு பெயர்களில் தமிழ் மொழியில் நூல்கள் உள்ளன என்று பார்த்தோம். ஆற்றுப்படை, வழிநடைச் சிந்து ஆகியவை இவ்வகைப்பாட்டில் அடங்கும். 19 , 20 நூற்றாண்டுகளைப் பயண இலக்கியத்தின் பொற்காலம் என்று கூறலாம்.
 1988 முதல் 2008 வரையிலான காலப் பகுதியில் தமிழில் ஏறத்தாழ 600 பயண நூல்கள் வெளிவந்துள்ளன. பயண இலக்கியங்கள்  மூலம் ஒரு இடத்தின் புவியியல் அமைப்பு, மக்களின் வாழ்வியல், பண்பாடு, நாகரீகம், நம்பிக்கைகள், விழாக்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அவை பயண வழிகாட்டிகளாகவும் விளங்குகின்றன. பயண இலக்கியங்கள் மக்களை மிகவும் கவர்ந்துள்ளதால் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் பயணக் கட்டுரையை வரவேற்று வெளியிடுகின்றன. இணையத்திலும் பயண இலக்கியம் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் பெருமளவில் எழுதப்படுகின்றன. அவற்றை விரும்பிப் படிக்கும் வாசகர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவையெல்லாம் பயண இலக்கியத்திற்கு ஒளி மிகுந்த எதிர்காலம் உண்டு என்பதை நிறுவுகின்றன.