Powered By Blogger

Tuesday, November 29, 2011

மறைந்து போன அருந்தமிழ் நூல்கள்

இயல் நூல்கள்
அகத்தியம்
அடி நூல்
அணிவியல்
அவிநயம் இயற்றியவர் அவிநயனார்
அவிநந்தமாலை
ஆசிரிய மாலை
ஆசிரிய முறை
ஆசிரிய முறி
ஆன்மவியல்
ஆட்சி நூல்
இந்திரம்
இந்திரகாளியம்
இளந்திரையம்
எதிர்நூல் ஐந்திரம்
ஒப்பு நூல்
ஓவிய நூல்
கச்சபுடம்
கடகண்டு
கணக்கியல்
கலியாணகாதை
கலைக்கோண்டு தண்டி
கலிப்பாடல்
கவிமயக்கிறை
களரியாவிரை
களவு நூல்
கனவு நூல்
காலகேசி
காக்கைபாடினியம்
குருகு
குண்டலகேசி இயற்றியவர் நாதகுத்தனார்
கோள் நூல்
சங்க யாப்பு
சயந்தம்
சாத வாகனம்
சிந்தம்
சிற்பநூல்
சிறு குரீ இயுறை
செயன் முறை
தந்திரவுரை
தகடூர் யாத்திரை
தும்பிப்பாட்டு
தேசிக மாலை
நாககுமாரகாவியம்
நீலகேசி
பஞ்சமரபு இயற்றியவர் அறிவனார்
பதினாறு படலம்
பரிநூல்
பழையபரிபாடல்கள்
பல்காப்பியம்
கல்காயம்
பண்மணிமாலை
பன்னிருபடலம்
பறவைப்பாட்டு
பாண்டியன் மரபு
பாட்டுமடை
பாண்டியன் பாரதம்
பெரும்பாரதம்
புணர்பாவை
புதையல் நூல்
பூதபூராணம்
பெருவல்லம்
பெருவஞ்சி
போக்கியல்
மணியாரம்
மந்திரநூல்
மயேச்சுர யாப்பு
மாபுராணம்
மார்க்கண்ட காஞ்சி
முதுநாரை
முதுகுருகு
முத்தொள்ளாயிரம்
முப்பெட்டுச் செய்யுள்
மூவடிமுப்பது
யசோதரகாவியம்
வஞ்சிப்பாட்டு
வளையாபதி
வாய்ப்பியம்
வியாழமாலை
விசாகன் பாரதம்
வீரமாலை
வீரவிளக்கம்
வீரவணுக்கம்
வெண்டாளி
வேந்தியன் முறை
வைப்பியம்
வைரமாலை
வஞ்சத்தொள்ளாயிரம்
இசை நூல்கள்
சிற்றிசை
பேரிசை
இசைநூல்
இசைநுணுக்கம்
இசை விளக்கம்
பஞ்சமரபு
பஞ்சமாபாரதீயம்
பண்ணமைதி
பண்விரி விளக்கம்
பாட்டும் பண்ணும்
ஆளத்தியமைப்பு
கருவி இலக்கணம்
தாள சமுத்திரம்
தாள வகை யோத்து
இசைக்கூறு
பாடற்பண்பு
நாடக நூல்கள்
கூத்து வரிருளநூல்
சயந்தம்
செயிற்றியம்
பரதம்
பரதனோயதீபம்
மதிவாணர் நாடகத்தமிழ் நூல்

மருத்துவ நூல்கள்
அகத்தியர் பன்னிரு காண்டம்
போகர் எண்ணாயிரம்
கோரக்கர் மூலிகை பயன் ஆயிரம்
கொங்கணவர் மூவாயிரத்து நூறு
கோரக்கர் வெண்பா ஏழாயிரம்
மச்சமுனி ஏழு காண்டம்
சிவ வாக்கியர் ஐந்து காண்டம்
காசிபர் வண்ணம்
ரோமமுனி வடுகம்
ராமதேவர் சாந்தப்பா
நந்தீசர் சந்தம்
சங்கு மாமுனி கலித்துறை
திருமூலர் திருமந்திரம் எண்ணாயிரம்
பதஞ்சலி ஏழு காண்டம்
சட்டமுனி நிகண்டு
சட்டமுனி இரண்ணாயிரத்தி எழுநூறு
காலங்கிநாதர் நாலு காண்டம்
போகர் எழுநூறு

Tuesday, November 22, 2011




அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் ......
-கம்பன்

ஐம்பெரும்பூதங்களான வாயு, நீர் ,ஆகாயம், நெருப்பு, நிலம் என்பன.
அஞ்சிலே ஒன்றான வாயு பெற்ற மகனான அனுமன், அஞ்சிலே ஒன்றாகிய
கடலைத் தாவி, அஞ்சிலே ஒன்றான ஆகாய வழியாக, அஞ்சிலே ஒன்றாகிய
நிலம் பெற்ற சீதையை இலங்கையில் கண்டு அவ்வூரில் அஞ்சிலே
ஒன்றாகிய நெருப்பை வைத்தவன்.

Friday, July 8, 2011

MASTER OF ALL SUBJECTS

தமிழ்வாணன்



ஒரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் அந்தத்துறையில்
மட்டுமே அறிவு பெற்றிருப்பார்கள் ஆனால் அனைத்துத் துறை நூல்களையும்
படித்து எல்லாத் துறையிலும் வல்லவராக விளங்கிய திரு தமிழ்வாணன்
அவர்களுக்கு MASTER OF ALL SUBJECTS என்ற புதியதொரு பட்டத்தை மக்கள்
சூட்டி மகிழ்ந்தது அவரது புகழை வெளிப்படுத்துகிறது.
அவர் தொடாத துறையும் இல்லை தொட்டுத் துலங்காத துறையும் இல்லை.
TIT BITS என்னும் குறுந்தகவல்களை மக்களுக்கு எடுத்துச்
சொல்வதற்காகவே ஒரு பத்திரிகை அந்நாளிலேயே இருந்ததென்றால் அது
கல்கண்டு மட்டும்தான்.
இன்று பத்திரிகைகள் பல்வேறு தகவல்களை வெளியிடுகின்றன ஆனால்
ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் கல்கண்டைத் தவிர மற்றப் பத்திரிகைகளில்
சிறுகதை, தொடர்கதை, நகைச்சுவைத் துணுக்குகள் இவை மட்டுமே
இடம்பெற்றிருக்கும் அந்தக் காலகட்டத்தில் பள்ளி மாணவர்களும், கல்லூரி
மாணவர்களும் வீட்டில் உள்ள பெண்களும் பொது மக்களும் உலக
நடப்புகளையும் அறிவியல் முன்னேற்றங்களையும் பல்துறை அறிவையும்
பெறக் காரணமாய் இருந்தவை தமிழ்வாணன் அவர்களின் எழுத்துக்கள் தான்
என்று கூறினால் அது மிகையாகாது.
இன்று கணினியும் இணையதளங்களும் தொலைக்காட்சியும் உலகத்தை
நமது வீட்டுக்குள் கொண்டு வந்து விட்ட நிலையில் தகவல்களைப் பெறுவது
சிரமமான செயல் அல்ல. ஆனால் இவையெல்லாம் இல்லாத அந்தக் கால
கட்டத்தில் பத்திரிகைகளும் வானொலியும் இருந்த போதிலும் தகவல்
பரிமாற்றம் பெருமளவில் நிகழவில்லை. வெளிநாட்டு இதழ்களையும்
அவ்வபோது வெளியாகும் சிறந்த புத்தகங்களையும் படித்து அவற்றில் உள்ள
செய்திகளைத் தமிழர்களும் அறிய வேண்டும் என்ற உயரிய நோக்கில்
அவற்றையெல்லாம் சிறு சிறு துணுக்குகளாக்கிக் கல்கண்டில் வெளியிட்டார்
. இயற்கை மருத்துவமானாலும் புதிய அறிவியல் படைப்புக்களானாலும்
உலக அரசியல் நிகழ்வுகளானாலும் சினிமா விளையாட்டு விலைவாசி
வேளாண்மை புதிய நூல்கள் இவற்றையெல்லாம் பற்றி நறுக்குத் தெறித்தாற்
போல் சின்னச் சின்ன வாக்கியங்களில் தெளிவாகப் புரியும் படி கல்கண்டில் வெளியிட்டு
வந்தார்.
மக்கள் நல்ல வண்ணம் வாழத் தேவையான ஒழுக்க நெறிகளையும் அறவியல் கருத்துகளையும் சிறு சிறுகட்டுரைகளாக வடித்துத் தந்தவர்.
மேலை நாட்டினர் போற்றிக் கொண்டாடும் கற்பனைக் கதாபாத்திரமான துப்பறியும்
ஷெர்லக் ஹோம்ஸ் போன்று தமிழர்கள் நெஞ்சில் நிலைத்திருகுகும் சங்கர்லால் என்ற
புகழ் பெற்ற கேரக்டரை உருவாக்கி உலவவிட்டவர் தமிழ்வாணன்.

இன்று தொலைக்காட்சியின் எந்தச் சேனலைத் திருப்பினாலும் மருத்துவக் குறிப்பு,அழகு குறிப்பு உளவியல் ஆலோசனை சுயமுன்னேற்றத்திற்கு வழிகாட்டுதல் என்று பல நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். ஆனால் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இப்படிப் பட்ட செய்திகளையெல்லாம் அறிய கூடிய வாய்ப்பு இல்லாத நிலையில் அத்தனை செய்திகளையும்
தனி ஒருவராகத் திரட்டித் தமிழர்களுக்கு வழங்கிய பெருமைக்குரியவர் அறிஞர் தமிழ்வாணன்.
"யாரொடும் பகையிலன் எனில் போரொடுங்கும் புகழ் ஒடுங்காதால்" என்று கவிச்
சக்கரவர்த்தி கம்பர் உரைத்தபடி எல்லோருடனும் நட்பு பாராட்டி சிரித்தபடியே அனைவரையும்
சிரிக்க வைத்த நல்லவர் நாவீறு கொண்ட நல்ல தமிழ்ப் பேச்சாளர்.

இவையெல்லாம் என்னுடைய தாத்தா சேர்த்து வைத்துள்ள கல்கண்டு
தொகுப்புகளிலிருந்தும் என்னுடைய தந்தை கூறிய அனுபவங்களிலிருந்தும் நான்
அறிந்தவை சிறந்த எழுத்தாளரும் பதிப்பாளருமான தமிழ்வாணன் அவர்களின் எழுத்துப்
பணியையும், பதிப்பு பணியையும் அன்னாரது புதல்வர்கள் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களும் திரு.ரவி தமிழ்வாணன் அவர்களும் தொடர்ந்து சிறப்புற ஆற்றி வருகிறார்கள்.
என்பது தமிழுக்குப் பெருமை தமிழர்களுக்கும் பெருமை.

Monday, June 27, 2011

MAGNIL ANRUP



தமிழாய்ந்த பெருமகனார் பேராசிரியர் மு.சி.பூரணலிங்கம்பிள்ளை அவர்கள் கல்லூரியில்
F.A வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போதே ஆங்கிலத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார் தமக்குப் பாடமாக இருந்த ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் ஒன்றிற்கு உரை எழுதி அச்சிட்டு வெளியிடஎண்ணினார். ஒரு மாணவர் எழுதிய புத்தகம் என்றால் அதை வாங்க மற்றவர்கள்
தயங்குவர் என்று எண்ணிய பூரணலிங்கம் பிள்ளை PURNALINGAM என்ற தமது பெயரைத்
தலைகீழாக மாற்றி MAGNIL ANRUP என்று வைத்துக்கொண்டார். அப்பெயரைக் கண்டவர்கள்
யாரோ ஒரு பெரிய ஆங்கிலத் துரை எழுதிய புத்தகம் என்று கருதினர். அதனால் உரை நூல்ஆயிரக்கணக்கில் விற்பனையானது. கல்லூரித் தலைவராக இருந்த ஆங்கிலேயர்,"MAGNIL ANRUP துரையின்
உரை நூல் நன்றாக இருக்கிறது" என்று பாராட்டிப் பூரணலிங்கம் பிள்ளைக்கும் மற்ற
மாணவர்களுக்கும் இந்நூலைப் பயன்படுத்தி பாடம் நடத்தினார்.

Sunday, May 29, 2011

குஜராத் நாட்டுப்புறக் கதை

பெண் புலி

வெகு காலத்திற்கு முன், குஜராத் மாநிலத்தில், மக்கள் ஊர் விட்டு ஊர்
செல்வதற்குச் சாலைகள் மட்டுமே பயன்பட்டன. அவர்கள் பயணம்
செய்வதற்கு ஒட்டகங்களையும் சிறு வண்டிகளையும் உபயோகித்தனர்.
மாடுகள் பூட்டிய வண்டிகளும், குதிரை வண்டிகளும் புழகத்தில் இருந்தன.
இவ்வாறு பயணம் செய்து ஊர்களுக்குச் செல்வதற்கு அதிகமான காலம்
செலவானது. பயங்கரமான திருடர்களும் வழிப்பறி செய்வதுண்டு. சில
நேரங்களில் கொள்ளைக்காரர்கள் கூட்டமாக வந்து பிராயணம் செய்யும்
பெண்களின் நகைகளை அடித்துப் பிடுங்கிக் கொண்டு ஓடி விடுவார்கள்.

பயணங்களின் இடையே தொல்லை தரும் கொள்ளைக்காரர்
களிடமிருந்து பிரயாணிகளைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று
கிராமத்துப் பெரியவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். பயணத்தின் போது
பாதுகாப்பாகக் கூடவே செல்வதற்குத் தொழில் முறைப் பாதுகாவலர்களை
உரிய ஊதியம் கொடுத்து நியமிக்கலாம் என்று முடிவெடுத்து அதன்படியே
பாதுகாவலர்களை நியமித்தனர். அவர்கள் திருமணக் குழுவினருடன்
பாதுகாப்பாகச் செல்வார்கள். ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு

கிராமத்திற்குப் பிறந்த வீட்டிலிருந்து கணவர் வீட்டிற்கோ அல்லது புகுந்த
வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்கோ பெண்கள் செல்லும் போது அவர்களுக்குப்
பாதுகாப்பாக இந்தப் பாதுகாவலர்கள் செல்வார்கள். அதோடு கிராமத்தினர்
சொல்லும் வேலைகளையும் செய்வார்கள்.

இந்தப் பாதுகாவலர்களில் ஒருவன் ஜிமா. அவன்
அக்கிராமத்தினரிடம் நல்ல பெயரைச் சம்பாத்திருந்தான். ஜிமா மிகுந்த
பலசாலியாகவும்,துணிவுடையவனாகவம் விளங்கியதால் உள்ளூர்த்
திருடர்கள் அவன் பெயரைக் கேட்டவுடனே அஞ்சி நடுங்கி ஓடி விடுவர்.
இதனால் ஜிமாவிற்குத் தலைகனம் ஏறிவிட்டது.அவன் தனக்கு நிகர்
யாருமில்லை என்று கர்வம் கொண்டான். தன்னுடைய பெருமைக்குக்
கிராமத்தினர் ஏவும் சிறிய வேலைகளைச் செய்வது இழுக்கு என்று
கருதினான். தன் புகழ் நிலைத்து நிற்கும் வகையில் பெரிய வேலைகளைச்
செய்ய வேண்டுமென்று கருதினான். அவன் தன்னைப் பற்றி எல்லோரிடமும்
பெருமையாக பேசத் தொடங்கினான். “நான் யார் தெரியுமா? இந்த ஊரில்
உள்ள அனைவரையும் விட தைரியமானவன்” என்று அனைவரிடமும்
அகந்தையுடன் கூறுவான்.

ஜிமா இருந்த கிராமத்திலிருந்து பத்து கல் தொலைவிலிருந்த
மற்றொரு கிராமத்தில் ஒரு இளம் பெண் வசித்து வந்தாள். அவள் பெயர்
ரூபாலிபா அவளுக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆகி இருந்தது. அவள்
தன் முதல் குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தாள். கருவுற்றிருந்த
அவளை மாமனார் வீட்டில் சீராட்டி, உரிய சடங்குகள் செய்து அவளது
தந்தை வீட்டிற்கு அனுப்பி வைக்கத் தீர்மானித்தனர்.அவளுக்குப்
பாதுகாவலாக உடன் செல்ல ஜிமா பணி அமர்த்தப்பட்டான்.

ரூபாலிபா புத்தாடை அணிந்திருந்தாள். அவள்
உடம்பிலும் கைகளிலும் கழுத்திலும் ஆபரணங்கள் அலங்கரித்தன.
தந்தை வீட்டிற்கு அவள் செல்ல வேண்டிய வழி பாலைவனமாக இருந்தது.
அவ்வழியில் ஒரு சில புதர்களைத் தவிர செடி, கொடி, மரம் ஏதுமில்லை.
அந்தப் பாதை தனிமைப்படுத்தப் பட்டு அச்சம் தரும் வகையில்
அமைந்திருந்தது. எருதுகள் பூட்டிய ஒரு வண்டியில் ரூபாலிபா
ஏறிக்கொண்டாள். மற்றொரு வண்டியில் ஜிமா வர பயணம் தொடங்கியது.
இரண்டு பீப்பாய் நிறைய தண்ணீரும் கொண்டு சென்றனர்.

இருட்டத் தொடங்கியதும் ஜிமா தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.
வண்டிக்காரன் அவனைப் பல முறை தட்டி எழுப்பி“எழுந்திரு! எழுந்திரு!
இருட்டி விட்டது; இப்போது தூங்குவது பாதுகாப்பான செயல் அல்ல” என்று
கூறினான். பாதித் தூக்கத்திலிருந்த ஜிமா “ஏன் பயப்படுகிறாய்? நான் ஜிமா
இருக்கிறேன் என்னை மீறி எதுவும் நடந்து விடாது. நீ வாயை மூடிக்
கொண்டு வண்டியை ஓட்டு” என்று அதட்டினான்.

படுதாவிற்குப் பின்னால் அமைதியாக அமர்ந்திருந்த
ரூபாலிபா ஜிமாவை அழைத்து “ஜிமா தூங்காதே! நீ இப்போது விழிப்போடு
இருக்க வேண்டும் ஏனென்றால் இப்போது இருட்டாகவும் தனிமையாகவும்
இருக்கிறது” என்று கூறினாள். ஆனால் ஜிமா அதைப் பற்றிக் கவலைபடாமல்
முன்னிலும் பலமாகக் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான்.

திடீரென்று வண்டிக்காரன் ஜிமாவை எழுப்பி, “எழுந்திரு
ஜிமா! தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது நம்முடன் வந்துள்ள அந்தப்
பெண்ணைப் பாதுகாக்க உன்னைத் தயார் படுத்திக் கொள்” என்று கூறினான்.
ஆனால் ஜிமா குறட்டை விட்டவாறே, “நான் ஜிமா என்பதை நினைவில்
வைத்துக் கொள்” என்று கூறிக்கொண்டே தூங்கி விட்டான்.

வெளிச்சம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. வண்டிக்காரர்கள்
மிகவும் அச்சமுற்று செய்வதறியாது திகைத்தனர். அப்பொழுது கையில்
ஆயுதம் ஏந்திய கொள்ளைக்காரர்கள் திடீரென்று வந்து வண்டிகளைச்
சூழ்ந்து கொண்டார்கள் முதலில் கொள்ளைக்காரர்கள் ஜிமாவைப் பிடித்துக்
கை கால்களை ஒரு கம்பத்தில் கட்டி மணலில் தள்ளினர். அவன்
பாலைவன மணலில் உருண்டு கொண்டே சென்று ஒரு புதர் தட்டி
விழுந்தான் கொள்ளைக்கூட்டத் தலைவன் ரூபாலிபாவிடம் சென்று அவளது
நகைகளைக் கழற்றித் தருமாறு மிரட்டினான். அவள் நகைகளை போட்டு

வைத்திருந்த பெட்டியைக் கொள்ளக்கூட்டத்தினரிடம் கொடுத்தாள் ஒரு
பெண் அணிந்திருக்கும் நகைகளைக் கழற்ற கூடாது என்பது திருடர்களின்
கொள்கையாக இருந்தது.ஆனால் இந்தத் திருடர் தலைவனோ, அந்த
வழக்கத்தையும் மதிக்கவில்லை. ரூபாலிபாவிடம் சென்று,
“நீ அணிந்திருக்கக்கூடிய வெள்ளிச் சிலம்பையும் நகைகளையும் கொடு”
என்று கேட்டான்.
ரூபாலிபா எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்தாள். “என்னுடைய இந்தச்
சிலம்பு வலிமையான சுத்த வெள்ளியில் செய்யப்பட்டது. நான் கருவுற்று
இருப்பதால் நகைகளைக் கழற்றக் கூடிய தெம்பு என்னிடம் இல்லை. ஆனால்
நீங்கள் விரும்பினால் அவற்றை நீங்களே எடுத்துக் கொள்ளலாம்” என்று
கூறிக்கொண்டு திரைக்கு வெளியே இரு பாதங்களையும் நீட்டினாள். இரண்டு
திருடர்கள் அவளது பாதங்களிலிருந்த சிலம்பைப் பறிக்க முயன்றனர்.
ரூபாலிபா வண்டிக்குள் சுற்றும் முற்றும் பார்த்து அங்கே கிடந்த ஒரு
கனமான கட்டையை எடுத்து இரண்டு திருடர்களின் தலையிலும் ஓங்கி
அடித்தாள். அவர்கள் மண்டை உடைந்து இறந்து போனார்கள்.

ரூபாலிபா வண்டியிலிருந்து கீழேக் குதித்துக் கையிலிருந்த
கட்டையினால் மற்றத் திருடர்களையும் சுற்றி சுழன்று அடித்தாள்.
ஒரு தைரியமுள்ள ராஜபுதனத்துப் பெண்ணைப் போல் துணிச்சலுடன்
சண்டையிட்டாள். கொள்ளைக் கூட்டத் தலைவன், அடிப்பட்ட தன்
ஆட்களை அங்கேயே விட்டு விட்டு எஞ்சியவர்களுடன் பாலைவனத்திற்குள்
ஓடி மறைந்தான். இதற்கிடையே ஜிமா தன்னுடைய கட்டுக்களை அவிழ்த்துக்
கொண்டு ரூபாலிபாவின் முகத்தில் விழிக்க வெட்கப்பட்டு ஓடி மறைந்தான்.

ரூபாலிபா வண்டிகளை ஓட்டச் சொல்லிக்
கொள்ளைக்காரர்களிடமிருந்து பறித்த வாள்களில் ஒன்றைக் கையில்
பிடித்துக் கொண்டு வண்டிகளுக்குப் பின்னால் பாதுகாப்பாகச் சென்றாள்.
துன்பங்களை எதிர்கொண்டு வழியில் உள்ள அவளது மாமாவின் கிராமத்தை
அடைந்தாள். அவர் அவளுக்கு உடல் வலியைக் குறைப்பதற்காக கசம்பா
என்ற பானத்தை கொடுத்தார். பின்னர் ரூபாலிபா அங்கிருந்து அவளது
தந்தையின் வீட்டிற்குச் சென்றாள் அவள் மிகவும்களைப்புற்றிருந்தாள்.
சண்டையில் ஏராளமான ரத்தத்தை இழந்ததால் அவள் இறந்து போனாள்.

ரூபாலிபா என்ற அந்த இளம் பெண்ணின் தைரியத்தை
இன்றும் அந்தக் கிராமத்தினர் நினைவு கூருகின்றனர். ரூபாலிபாவையும்
கொள்ளைக்கூட்டதாருடன் சண்டையிட்ட அவளது வீரத்தையும் புகழும்
பாடல்கள் இன்றும் முழங்கி வருகின்றன.

Sunday, May 22, 2011

Saturday, May 7, 2011

அண்ணா

காஞ்சிநகர் கல்வெட்டைக்
காலமழை அழிக்காது
கரும்புநிகர் சொல்வெட்டைக்
கவினுலகம் மறக்காது
கலை தந்த தலைமகனைக்
கன்னித்தாய் தமிழுக்கு
நிலை தந்த கலைமகனைப்
பிழையின்றிப் போற்றிடுவோம்
அண்ணா துயிலுமிடம்
அன்புதனைப்பயிலுமிடம்
அவன் நினைவே நிம்மதி
அண்ணனன்றோ நம்மதி.

Sunday, April 10, 2011

மெல்லத் தமிழ் இனி சாகும்

முன்னுரை
“ இருந்தமிழே உன்னால் இருந்தேன்-இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”
என்று தமிழ்விடுதூது என்னும் இலக்கியத்தில் ஒரு பழந்தமிழ்ப் புலவன்
பாடினான். ஆனால் இன்று தமிழின் நிலை என்ன? தமிழ் கற்றவர்க்கு
என்ன பயன் விளைந்தது என்று ஆராய்ந்தால் தமிழின் இன்றைய
இரங்கத் தக்க நிலை விளங்கும். வழக்கிழந்த மொழியாகிய வடமொழி
காலப்போக்கில் மறைந்துவிடும்; தமிழ் மொழி தலை நிமிர்ந்து நிற்கும்
என்ற தமிழர்களின் நம்பிக்கை இன்று பொய்யாய்ப் பழங்கனவாய்ப்
போய்விட்டதோ? என்று அஞ்சுகிற நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

தமிழரின் இன்றைய நிலை
“தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா”
என்று பாடிய நாமக்கல்லாரும்.
“அத்திலக வாசனை போல்
அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க
இருந்த பெரும் தமிழணங்கே”
என்று பெருமிதமுற்ற மனோன்மணீயம் சுந்தரனாரும் நல்வினைப் பயனாக
இன்று இல்லை. இருந்திருந்தால் தமிழின், தமிழரின் இழிநிலை கண்டு
ஆற்றாது மனம் கலங்கி இருப்பர்.
தமிழரின் அன்றைய பெருமையும் இன்றைய சிறுமையும்
திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும் குன்றெறிந்த
முருகவேளும் நாவீறு கொண்ட நக்கீரனாரும் சங்கம் வைத்து வளர்த்த
தமிழ் அன்று அரியணையில் அரசோச்சி இருந்தது. அரசர்களின்
அருந்தவப்புதல்வியாக வளர்ந்தவள் தமிழ் மகள். மன்னனும் மக்களும்
தமிழ் மண்ணின் மீது அன்பும் தமிழ் மொழியின் மீது பற்றும் உடையவர்களாக
விளங்கினர். இலக்கியங்கள் எழுந்தன மக்களின் வாழ்க்கையைச் சீரமைக்கும்
அறநூல்கள் பிறந்தன. புலவர்கள் போற்றப்பட்டனர். சங்க காலத்தில்
தழைத்திருந்த தமிழ் மொழி களப்பிரர் காலத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
காப்பியங்களும் சிற்றிலக்கியங்களும் தமிழைக் காத்தன. ஆங்கிலேயர்
காலத்தில் தமிழுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. ஆங்கிலக் கல்வியின்
தாக்கத்தால் அறிவியல் எழுச்சி பெற்றது. மறைந்து போன வடமொழியை
மீட்டுருவாக்க அம்மொழி கற்றவர்கள் அதற்கான முயற்சியில் முனைப்புக்
காட்டினர். தங்கள் மொழி வளராவிடினும் ஆங்கில மொழியின் துணை
கொண்டு தமிழை அழித்திட முயன்றனர். தூய தமிழை மறைத்து
வடமொழியையும் ஆங்கிலத்தையும் தமிழில் கலந்து ஒரு கலப்பு மொழியை
உருவாக்கினர். இந்தியைத் தமிழகத்தில்நுழைத்திடத் தமிழ்ப் பகைவரோடு
கைகோர்த்தனர். அவர்களது முயற்சியை எதிர்த்து எழுந்தவை தான்
தனித்தமிழ் இயக்கமும் திராவிட இயக்கமும். பெரியாரும் அண்ணாவும்
இந்தி எதிர்ப்புப் போரை முன் நின்று நடத்தினர். அண்ணா அரியணை ஏறியதும்
இந்தியைத் தமிழ்நாட்டிலிருந்து விரட்டித் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே
இருக்கும் வண்ணம் இருமொழிக் கொள்கையைக் கொண்டு வந்தார்.

தமிழ்ப் புறக்கணிப்பு
எழுச்சியும் ஏற்றமும் பெற்று வந்த தமிழ் மொழி காலப்
போக்கில் மெல்ல மெல்லப் புறக்கணிக்கப்பட்டது. அண்ணாவுக்குப் பின்
வந்த ஆட்சியாளர்கள் அனைவரும் சுயநல அரசியலில் ஈடுபட்டதால்
தமிழ் வளர்ச்சியைப் பற்றிக் கவலைபடவில்லை.


தமிழ்ப் பாடமொழி, தமிழ்ப்பயிற்றுமொழி, தமிழில்
படிப்போருக்கு வேலையில் முன்னுரிமை என்றெல்லாம் சட்டங்கள்
இயற்றுவதும் அவற்றை எதிர்த்துத் தமிழர்களே வழக்குத் தொடுப்பதும்
நீதிமன்றத் தடையால் அவை நிறைவேறாமல் நின்று போவதும்
இந்நாட்டில் வழக்கமாகிவிட்டன. உயர் கல்விக்கான தகுதிப் பட்டியலில்
தமிழுக்கு இடமே இல்லை. ஆங்கில மொழி அறிவு அற்றவர்களாக உள்ள
மாணவர்களுக்குக் கூட அம்மொழியில் பயிற்சியளித்து வெளிநாட்டு வேலை
வாய்ப்புக்கு வழி வகுக்கப்படுகிறது. ஆனால் தமிழ் மொழி எதற்கும்
தகுதியற்றது என்ற நிலை தான் நாட்டில் நிலவுகிறது.



முடிவுரை
உயர் கல்விக்கான/தொழிற்கல்விக்கான தகுதியில் தமிழில் பெறும்
மதிப்பெண்ணும் சேர்க்கப்பட்டால் தான் தமிழுக்கும் ஒரு மரியாதை
உண்டாகும். சப்பான் போன்ற நாடுகளைப் போலத் தாய்மொழியில் தான்
படித்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் தான் தமிழ் வாழும் -
வளரும் இல்லையேல் மெல்ல அல்ல விரைவிலேயே தமிழ்
மறக்கப்பட்டுவிடும் நிலை உண்டாகும்.

இக்கட்டுரை தமிழ் நண்பர்கள் நடத்திய கட்டுரைப்போட்டி2011-இல் பரிசு பெற்றது.

Sunday, March 27, 2011

ரயிலை நிறுத்த வழி

போப் பாண்டவர் இருபத்து மூன்றாவது ஜான் நகைச்சுவை உணர்வு உடையவர் அவர் வெனீஸ் நகரத்தில் பாதிரியராக இருந்த போது ஒரு பிஷப் வந்தார். அவரை
உல்லாச படகில் ஏற்றி சென்று ஊர் சுற்றி காட்டினார் ஜான். பிஷப் தன் கை
கடிகாரத்தை கவனித்து நேரமாகிவிட்டதே! ரயில் புறப்பட்டிருக்குமே என்றார்.
"கவலைப்படாதீர்கள் பின்னால் வரும் படகில் ஸ்டேஷன் மாஸ்டர் இருக்கிறார்
வேண்டுமென்றே தான் அவரையும் அழைத்து வந்தேன்.அவர் நம்முடன்
இருக்கும் வரையில் ரயில் புறப்படாது". என்றார் ஜான்

Thursday, March 17, 2011

பச்சோந்தி

வரதட்சணைக் கொடுமையை வன்மையாகக்
கண்டிக்கிறேன்-
எனக்கு மகள் இருப்பதால்
எதிர் ஜாமின் முறையை ஏகமனதாக
ஏற்கிறேன்-
எனக்கு மகனும் இருப்பதால்

Saturday, February 26, 2011

மகாவித்துவான் ராகவையங்கார்



தோற்றம் – 20.09.1870
மறைவு – 11.07.1946
பிறந்த ஊர் – ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டம்
தென்னவராயன் புதுக்கோட்டை
பெற்றோர் – ராமானுஜ அய்யங்கார்-,பத்மாசினி அம்மையார்

பதிப்புச்செம்மை, உரைவளம், ஆய்வுச் சொற்பொழிவு, செய்யுள்,
மொழிபெயர்ப்பு, மொழியியல், நூல் ஏற்றல், இதழாசிரியர், வரலாறு
இலக்கியம், சமயம், பாடம் பயிற்றல், ஏடு திரட்டலாகிய துறைகளில்
முன்னோடியாகத் திகழ்ந்தவர் தமிழறிஞர் திரு. ரா.ராகவையங்கார்
அவர்கள் ஆவார்.
5 வயதிலேயே தந்தையை இழந்ததால் ராகவையங்காரை அவரது
தாய் மாமன் முத்துசாமி அய்யங்கார்தான் வளர்த்து கல்வி பயிலச் செய்தார்.
முத்துசாமி அய்யங்கார் சேது சமத்தானத்தில் அரசவை வித்துவானாகத்
திகழ்ந்தார். அவரது உதவியாலும் சமத்தானப் புலவர்கள் பழக்கத்தாலும்
ராகவையங்கார் கல்வியறிவு பெற்று, சொல் வன்மையோடு கவி பாடும்
ஆற்றல் அமையப் பெற்றார்.
திரு.ரா.ராகவையங்கார் அவர்கள் தமது பதினெட்டாம் வயதில்
மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப்
பணியேற்றார். பின்னர் திருச்சி சேஷையங்கார் பள்ளியில் தமிழாசிரியரானார்.
இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி தமது அரசவை வித்துவானாக இவரை
நியமித்தார். 1897-இல் அரசவைப் புலவராக இருந்து கொண்டே
பிற இடங்களிலும் பணியாற்றினார். 1901-ஆம் ஆண்டு
பாண்டித்துரைத் தேவர் நிறுவிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்ப்
பணியில் ஈடுபட்டார்.நூற்பதிப்பு,ஆராய்ச்சித் துறைகளின் தலைவராய்
அமர்ந்துஅரும் பணியாற்றினார். மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட
செந்தமிழ் என்னும் திங்கள் இதழின் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார்.
1904-ஆம் ஆண்டில் உடல் நலக் குறைவு காரணமாக தேவகோட்டை சென்று
வாழ்ந்து வந்தார். 1910-ஆம் ஆண்டு முதல் 25 ஆண்டுகள் இராமநாதபுரம்
இராசராசேச்சுவர சேதுபதி மன்னரின் அவைக்களப்புலவராகப்பணிப்புரிந்தார்.
பல ஆண்டுகள் சென்னைப்பல்கலைக்கழகத் தேர்வாளராகவும் பாடப்புத்தகக்
குழுவினரில் ஒருவராகவும் இருந்தார். 1935 முதல் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் தோற்றுவிக்கப்பட்ட தமிழாராய்ச்சித் துறையில்
முதன்மை ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து 1941-இல் ஓய்வு பெற்று
இராமநாதபுரம் சென்று தமது இல்லத்தில் வாழ்ந்து 1946-இல் இயற்கை
எய்தினார்.

ரா.ராகவையங்கார் தமது அரிய ஆராய்ச்சியின் மூலம்
தெளிந்த கருத்துக்களை நூல்களாக எழுதினார். இவர் ஏழு உரைநடை
நூல்களும் இரு உரை நூல்களும் ஆறு செய்யுள் நூல்களும் மூன்று
மொழிபெயர்ப்பு நூல்களும் எழுதியுள்ளார். மேலும் நான்கு சங்க நூல்கள்,
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், மூன்று இலக்கண நூல்கள் ஆகியவற்றைப்
பதிப்பித்துள்ளார். வால்மீகி ராமாயணத்தில் சில பகுதிகளையும் ரகுவம்சத்தில்
சில சருக்கங்களையும் செய்யுள் நடையில் மொழிபெயர்த்துள்ளார். அவரது
படைப்புக்களின் பட்டியல் வருமாறு.

உரைநடை நூல்கள்
1.சேதுநாடும் தமிழும்
2.வஞ்சிமாநகர்
3. நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்
4. அண்ட கோள மெய்ப்பொருள்
5.தமிழ் வரலாறு
6.தித்தன்
7.கோசர்
உரை நூல்கள்
8.ஆத்திசூடி உரை
9.திருப்புல்லையமக அந்தாதி

செய்யுள் நூல்கள்
1.புவி எழுபது
2.தொழில் சிறப்பு
3.திருவடிமாலை
4. நன்றியில் திரு
5.பாரி காதை
6. இராசராசேசுவர சேதுபதி ஒரு துறைக் கோவை
மொழிபெயர்ப்பு நூல்கள்
1.பகவத் கீதை
2.பல்லட சதகம்
3.சாகுந்தலம்
பதிப்பித்த நூல்கள்
1.அகநானூறு
2.குறுந்தொகை விளக்கம்
3.பெரும்பாணாற்றுப்படை
4.பட்டினப்பாலை
5.இனியவை நாற்பது
6.ஐந்திணை ஐம்பது
7.திணைமாலை நூற்றைம்பது
8.நான்மணிக்கடிகை
9.நேமிநாதம் மூலமும் உரையும்
10.பன்னிருபாட்டியல்
11.தொல்காப்பியம்- செய்யுளியல்-நச்சினார்க்கினியர் உரை


உரையாற்றல்
ரா.ராகவையங்கார் அவர்கள் மொழி இலக்கணத்தில்
தேர்ந்த தெளிவுடையவராதலால் புணர் நிலைச் சொற்களை இயல்பாகக்
கையாளும் திறமை பெற்றவர். “அவரிளம்பிராயத்தே” “ நாடாண்ட” போன்ற
சொற்களை அவர் உரையில் காணலாம். ஒரு தொடரையே ஒரு பத்தியாக
அமைக்கும் இவரது தொடர்நிலைத் திறத்தை வியக்காதவர் இல்லை.
எடுத்துகாட்டாக
“இவருக்குப் பின் இச்சேதுநாட்டுப்பிறந்து சிறந்த புலவர்
தொகையை எண்ணி இனைத்தெனல் இயலாதொன்றேனும் என்
சிற்றறிவுக்கு இயன்ற வரை முயன்று சிலரைப் பற்றிக் கூற
வெழுகின்றேன்” – என்று எழுதுவார்.
இவர் சிறு சிறு தொடராக எழுதுவதிலும் வல்லவர்.
இவரது நடையைப் பின்பற்றியே தமிழ்த்தென்றல் திரு.வி.க ,டாக்டர்
மு.வ போன்றவர்கள் எழுதினர். நுணுக்கமாக ஆராயந்து செய்திகளைச்
சிறப்பாகச்சொல்லுவதில் வல்லவர். ஊர்ப் பெயர்களையும் ஊரின் சிறப்பையும்
தெளிவு பட விளக்கிக் கூறுவார்.திருஉத்தரகோசமங்கை , திருப்புல்லாணி ,
திருப்பெருந்துறை , மணக்குடி , இடைவடநாடு போன்ற ஊர்களைக் குறித்த
தகவல்களை அந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோருக்கு
விளக்கமாக அளித்துள்ளார். அவரது எழுத்துக்கள் சுற்றுலாக்
கல்விக்கு வழிகாட்டியாக விளங்குகின்றன.
பதிப்பாற்றல்
திரு.ரா.ராகவையவங்கார் சிறந்த பதிப்பாசிரியராகத் திகழ்ந்தார். இவர்
சங்க நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பிற நூல்கள் ஆகியவற்றைச்
செந்தமிழ் இதழின் வாயிலாகப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.நூலைப்
பதிப்பிக்கும் போது நூலாசிரியர் பற்றிய அரிய கருத்துகளைக் கூறுகிறார்.
பல சுவடிகளை ஒப்பிட்டு, ஆராய்ந்து , படிப்பவருக்கு அய்யம் ஏதும் வராத
வண்ணம் விளக்கமாக வெளியிட்டுள்ளார்.திரு.ரா.ராகவையங்கார்
பாட வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டியும், பிற இலக்கியக் கருத்துக்களைச்
சான்றோடு விளக்கியும் அருஞ்சொற்பொருள்களைக் கூறியும்
செம்மையான பதிப்பாக நூலை வெளியிடுவதில் தன்னேரில்லாதவர்.
இவரது பதிப்புக்களின் மூலம் இவரது பன்னூல் பயிற்சியையும்,
பல்துறை அறிவையும் அறியலாம்.

தமிழ் இலக்கியங்கள் தமிழக வரலாற்றின்
பதிவுகளாகப் பல நூல்களைக் கொண்டுள்ளன.வரலாற்றுப்பகுதிகளில்
குழப்பமுடையவற்றை ஆராய்ந்து தெளிவாக்கியுள்ள அறிஞர்களில்
ரா.ராகவையங்காரும் ஒருவர். வஞ்சிமாநகர், பாரிகாதை, பாரிமகளிர்
சேதுநாடும் தமிழும் ஆகிய நூல்களில் அத்தகைய ஆராய்ச்சித் திறனைக்
காண முடிகிறது.

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் தமது
ஆசிரியரான திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒருவரை மட்டுமே
மகாவித்துவான் என்று போற்றிப் புகழ்வார்.அவரே மேலைச்சிவபுரி சன்மார்க்க
சங்கத்தின் ஆண்டு விழாவில்,திரு. ரா.ராகவையங்காருக்கு மகாவித்துவான்
என்ற பட்டமளித்துச் சிறப்பித்துள்ளார்.

ஆய்வுலகம் போற்றும் அறிஞரான
ரா.ராகவையங்காரின் செம்மொழித் தொண்டு தமிழுலகம் போற்றிப்
புகழத் தக்கது.

Monday, February 14, 2011

ஐபிடு என்ற அறிஞர்

ஒரு ஆராய்ச்சி கட்டுரையின் அடிக்குறிப்பில் இவ்வாறு காட்டப்பட்டிருந்தது

1.திருக்குறள்- அறத்துப்பால் - பக்கம்-18
2. IBID - பொருட்பால் - பக்கம் -70

ஒரு மாணவர் இதை படித்துவிட்டு தேர்வில் இவ்வாறு எழுதினார்.
"திருவள்ளுவர் அறத்துப்பாலிலும் ஐபிடு என்ற அறிஞர் பொருட்பாலிலும் இக்கருத்துகளைத்
தெரிவித்துள்ளனர்"

"IBID" என்பது "முன்னர் குறிப்பிட்டது". என்று தெரியாமல் ஐபிடை மேனாட்டு அறிஞர்
என்று எண்ணிவிட்ட மாணவரின் அறியாமை ஆசிரியருக்கு சிரிப்பை வரவழைத்தது.