Powered By Blogger

Saturday, February 26, 2011

மகாவித்துவான் ராகவையங்கார்



தோற்றம் – 20.09.1870
மறைவு – 11.07.1946
பிறந்த ஊர் – ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டம்
தென்னவராயன் புதுக்கோட்டை
பெற்றோர் – ராமானுஜ அய்யங்கார்-,பத்மாசினி அம்மையார்

பதிப்புச்செம்மை, உரைவளம், ஆய்வுச் சொற்பொழிவு, செய்யுள்,
மொழிபெயர்ப்பு, மொழியியல், நூல் ஏற்றல், இதழாசிரியர், வரலாறு
இலக்கியம், சமயம், பாடம் பயிற்றல், ஏடு திரட்டலாகிய துறைகளில்
முன்னோடியாகத் திகழ்ந்தவர் தமிழறிஞர் திரு. ரா.ராகவையங்கார்
அவர்கள் ஆவார்.
5 வயதிலேயே தந்தையை இழந்ததால் ராகவையங்காரை அவரது
தாய் மாமன் முத்துசாமி அய்யங்கார்தான் வளர்த்து கல்வி பயிலச் செய்தார்.
முத்துசாமி அய்யங்கார் சேது சமத்தானத்தில் அரசவை வித்துவானாகத்
திகழ்ந்தார். அவரது உதவியாலும் சமத்தானப் புலவர்கள் பழக்கத்தாலும்
ராகவையங்கார் கல்வியறிவு பெற்று, சொல் வன்மையோடு கவி பாடும்
ஆற்றல் அமையப் பெற்றார்.
திரு.ரா.ராகவையங்கார் அவர்கள் தமது பதினெட்டாம் வயதில்
மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப்
பணியேற்றார். பின்னர் திருச்சி சேஷையங்கார் பள்ளியில் தமிழாசிரியரானார்.
இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி தமது அரசவை வித்துவானாக இவரை
நியமித்தார். 1897-இல் அரசவைப் புலவராக இருந்து கொண்டே
பிற இடங்களிலும் பணியாற்றினார். 1901-ஆம் ஆண்டு
பாண்டித்துரைத் தேவர் நிறுவிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்ப்
பணியில் ஈடுபட்டார்.நூற்பதிப்பு,ஆராய்ச்சித் துறைகளின் தலைவராய்
அமர்ந்துஅரும் பணியாற்றினார். மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட
செந்தமிழ் என்னும் திங்கள் இதழின் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார்.
1904-ஆம் ஆண்டில் உடல் நலக் குறைவு காரணமாக தேவகோட்டை சென்று
வாழ்ந்து வந்தார். 1910-ஆம் ஆண்டு முதல் 25 ஆண்டுகள் இராமநாதபுரம்
இராசராசேச்சுவர சேதுபதி மன்னரின் அவைக்களப்புலவராகப்பணிப்புரிந்தார்.
பல ஆண்டுகள் சென்னைப்பல்கலைக்கழகத் தேர்வாளராகவும் பாடப்புத்தகக்
குழுவினரில் ஒருவராகவும் இருந்தார். 1935 முதல் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் தோற்றுவிக்கப்பட்ட தமிழாராய்ச்சித் துறையில்
முதன்மை ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து 1941-இல் ஓய்வு பெற்று
இராமநாதபுரம் சென்று தமது இல்லத்தில் வாழ்ந்து 1946-இல் இயற்கை
எய்தினார்.

ரா.ராகவையங்கார் தமது அரிய ஆராய்ச்சியின் மூலம்
தெளிந்த கருத்துக்களை நூல்களாக எழுதினார். இவர் ஏழு உரைநடை
நூல்களும் இரு உரை நூல்களும் ஆறு செய்யுள் நூல்களும் மூன்று
மொழிபெயர்ப்பு நூல்களும் எழுதியுள்ளார். மேலும் நான்கு சங்க நூல்கள்,
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், மூன்று இலக்கண நூல்கள் ஆகியவற்றைப்
பதிப்பித்துள்ளார். வால்மீகி ராமாயணத்தில் சில பகுதிகளையும் ரகுவம்சத்தில்
சில சருக்கங்களையும் செய்யுள் நடையில் மொழிபெயர்த்துள்ளார். அவரது
படைப்புக்களின் பட்டியல் வருமாறு.

உரைநடை நூல்கள்
1.சேதுநாடும் தமிழும்
2.வஞ்சிமாநகர்
3. நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்
4. அண்ட கோள மெய்ப்பொருள்
5.தமிழ் வரலாறு
6.தித்தன்
7.கோசர்
உரை நூல்கள்
8.ஆத்திசூடி உரை
9.திருப்புல்லையமக அந்தாதி

செய்யுள் நூல்கள்
1.புவி எழுபது
2.தொழில் சிறப்பு
3.திருவடிமாலை
4. நன்றியில் திரு
5.பாரி காதை
6. இராசராசேசுவர சேதுபதி ஒரு துறைக் கோவை
மொழிபெயர்ப்பு நூல்கள்
1.பகவத் கீதை
2.பல்லட சதகம்
3.சாகுந்தலம்
பதிப்பித்த நூல்கள்
1.அகநானூறு
2.குறுந்தொகை விளக்கம்
3.பெரும்பாணாற்றுப்படை
4.பட்டினப்பாலை
5.இனியவை நாற்பது
6.ஐந்திணை ஐம்பது
7.திணைமாலை நூற்றைம்பது
8.நான்மணிக்கடிகை
9.நேமிநாதம் மூலமும் உரையும்
10.பன்னிருபாட்டியல்
11.தொல்காப்பியம்- செய்யுளியல்-நச்சினார்க்கினியர் உரை


உரையாற்றல்
ரா.ராகவையங்கார் அவர்கள் மொழி இலக்கணத்தில்
தேர்ந்த தெளிவுடையவராதலால் புணர் நிலைச் சொற்களை இயல்பாகக்
கையாளும் திறமை பெற்றவர். “அவரிளம்பிராயத்தே” “ நாடாண்ட” போன்ற
சொற்களை அவர் உரையில் காணலாம். ஒரு தொடரையே ஒரு பத்தியாக
அமைக்கும் இவரது தொடர்நிலைத் திறத்தை வியக்காதவர் இல்லை.
எடுத்துகாட்டாக
“இவருக்குப் பின் இச்சேதுநாட்டுப்பிறந்து சிறந்த புலவர்
தொகையை எண்ணி இனைத்தெனல் இயலாதொன்றேனும் என்
சிற்றறிவுக்கு இயன்ற வரை முயன்று சிலரைப் பற்றிக் கூற
வெழுகின்றேன்” – என்று எழுதுவார்.
இவர் சிறு சிறு தொடராக எழுதுவதிலும் வல்லவர்.
இவரது நடையைப் பின்பற்றியே தமிழ்த்தென்றல் திரு.வி.க ,டாக்டர்
மு.வ போன்றவர்கள் எழுதினர். நுணுக்கமாக ஆராயந்து செய்திகளைச்
சிறப்பாகச்சொல்லுவதில் வல்லவர். ஊர்ப் பெயர்களையும் ஊரின் சிறப்பையும்
தெளிவு பட விளக்கிக் கூறுவார்.திருஉத்தரகோசமங்கை , திருப்புல்லாணி ,
திருப்பெருந்துறை , மணக்குடி , இடைவடநாடு போன்ற ஊர்களைக் குறித்த
தகவல்களை அந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோருக்கு
விளக்கமாக அளித்துள்ளார். அவரது எழுத்துக்கள் சுற்றுலாக்
கல்விக்கு வழிகாட்டியாக விளங்குகின்றன.
பதிப்பாற்றல்
திரு.ரா.ராகவையவங்கார் சிறந்த பதிப்பாசிரியராகத் திகழ்ந்தார். இவர்
சங்க நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பிற நூல்கள் ஆகியவற்றைச்
செந்தமிழ் இதழின் வாயிலாகப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.நூலைப்
பதிப்பிக்கும் போது நூலாசிரியர் பற்றிய அரிய கருத்துகளைக் கூறுகிறார்.
பல சுவடிகளை ஒப்பிட்டு, ஆராய்ந்து , படிப்பவருக்கு அய்யம் ஏதும் வராத
வண்ணம் விளக்கமாக வெளியிட்டுள்ளார்.திரு.ரா.ராகவையங்கார்
பாட வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டியும், பிற இலக்கியக் கருத்துக்களைச்
சான்றோடு விளக்கியும் அருஞ்சொற்பொருள்களைக் கூறியும்
செம்மையான பதிப்பாக நூலை வெளியிடுவதில் தன்னேரில்லாதவர்.
இவரது பதிப்புக்களின் மூலம் இவரது பன்னூல் பயிற்சியையும்,
பல்துறை அறிவையும் அறியலாம்.

தமிழ் இலக்கியங்கள் தமிழக வரலாற்றின்
பதிவுகளாகப் பல நூல்களைக் கொண்டுள்ளன.வரலாற்றுப்பகுதிகளில்
குழப்பமுடையவற்றை ஆராய்ந்து தெளிவாக்கியுள்ள அறிஞர்களில்
ரா.ராகவையங்காரும் ஒருவர். வஞ்சிமாநகர், பாரிகாதை, பாரிமகளிர்
சேதுநாடும் தமிழும் ஆகிய நூல்களில் அத்தகைய ஆராய்ச்சித் திறனைக்
காண முடிகிறது.

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் தமது
ஆசிரியரான திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒருவரை மட்டுமே
மகாவித்துவான் என்று போற்றிப் புகழ்வார்.அவரே மேலைச்சிவபுரி சன்மார்க்க
சங்கத்தின் ஆண்டு விழாவில்,திரு. ரா.ராகவையங்காருக்கு மகாவித்துவான்
என்ற பட்டமளித்துச் சிறப்பித்துள்ளார்.

ஆய்வுலகம் போற்றும் அறிஞரான
ரா.ராகவையங்காரின் செம்மொழித் தொண்டு தமிழுலகம் போற்றிப்
புகழத் தக்கது.

Monday, February 14, 2011

ஐபிடு என்ற அறிஞர்

ஒரு ஆராய்ச்சி கட்டுரையின் அடிக்குறிப்பில் இவ்வாறு காட்டப்பட்டிருந்தது

1.திருக்குறள்- அறத்துப்பால் - பக்கம்-18
2. IBID - பொருட்பால் - பக்கம் -70

ஒரு மாணவர் இதை படித்துவிட்டு தேர்வில் இவ்வாறு எழுதினார்.
"திருவள்ளுவர் அறத்துப்பாலிலும் ஐபிடு என்ற அறிஞர் பொருட்பாலிலும் இக்கருத்துகளைத்
தெரிவித்துள்ளனர்"

"IBID" என்பது "முன்னர் குறிப்பிட்டது". என்று தெரியாமல் ஐபிடை மேனாட்டு அறிஞர்
என்று எண்ணிவிட்ட மாணவரின் அறியாமை ஆசிரியருக்கு சிரிப்பை வரவழைத்தது.