Powered By Blogger

Saturday, November 19, 2016

தமிழ் உரைநடையின் வளர்ச்சி ஒரு பார்வை



முன்னுரை
  
நம்முடைய தாய்த் தமிழை முத்தமிழ் என்று வழங்கினர் நம் முன்னோர். இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்பன முத்தமிழ்ப்  பிரிவுகள் ஆகும். இயற்றமிழ் என்பது உரைநடையும் செய்யுளுமாகிய இரண்டு   நிலைகளிலும்   வளர்ந்து வருகிறது. தொடக்கத்தில் செய்யுள் வடிவிலேயே தமிழ் இலக்கியம் செல்வாக்குப் பெற்றிருந்தது.“உரைநடை என்பது வளர்ந்தது பிற்காலத்திலேயே ஆகும். உரைநடை வளர்ந்த பிறகு வரலாறு, சமயம், மருத்துவம் முதலான துறைகள் உரைநடையிலேயே எழுதப்படலாயின. அதன் பிறகே நாடகம், கதை முதலியனவும் பாட்டில் இருந்து உரைநடை வடிவம் பெற்றன.” என்று தெளிவாக விளக்குகிறார் டாக்டர் மு.வ (இலக்கிய மரபு பக் 1,2)
            தொல்காப்பியர் அக்கால இலக்கியத்தை ஏழு வகைப்படுத்தினார்.
“பாட்டிடை வைத்த  குறிப்பி  னானும்
                  பாவின்று எழுந்த கிளவியானும்
                         பொருளொடு புணராப் பொய்ம்மொழியானும்
                         பொருளொடு புணர்ந்த நகைமொழியானும்
                         உரைவகை நடையே நான்கு என மொழிப ”
                                                  (தொல் – செய்யுளியல் – 171)

            கட்டுரை, கதை, நகைச்சுவை இவற்றிற்கு உரைநடை பயன்படுத்தபட்டது. தொல்காப்பியர் குறிப்பிடும் உரைவகை நடை என்ற தொடரே பின்னாளில் உரைநடை என வழங்கலாயிற்று.

முதல் உரைநடை
               சங்கம் மருவிய காலத்தில் சேரன் தம்பி இளங்கோவடிகள் இசைத்த சிலப்பதிகாரத்தை  “ உரையிடையிட்ட பாட்டுடைச்  செய்யுள் ”  என்பர்.   ஆனால் தொடர்ந்த உரைநடையை அதில் நாம் காண முடியாது. கி.பி. 8 –ஆம் நூற்றாண்டில் தோன்றிய இறையனார் களவியல் உரையில் தான் தெளிந்த உரைநடையைக் காண முடிகிறது.
உரையாசிரியர்கள்
             இறையனார் களவியல் உரை தோற்றம் பெற்ற பின்னர் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல் 15 - ஆம் நூற்றாண்டு  வரை  உரையாசிரியர்களின்  காலமாக விளங்கியது. தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களுக்கும்,பத்துப்பாட்டு போன்ற இலக்கிய நூல்களுக்கும் அவர்கள் உரை எழுதினர். இளம்பூரணர், பேராசிரியர், உச்சி மேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர், பரிமேலழகர், சேனாவரையர் முதலியோர் உரைநடை   வளர்ச்சிக்கு ஆற்றிய   பணியை தமிழுலகம் என்றென்றும் மறவாது. சமணர்களும். வைணவர்களும் மணிப்பிரவாளம் எனப்படும் பிறமொழிக் கலப்புடன் தமிழில் உரைநடை எழுதினர்.
 கல்வெட்டு வளர்த்த உரைநடை
               தமிழ் உரைநடை வளர்ச்சியில்   கல்வெட்டுகளுக்கும் பெரும் பங்கு உண்டு. இனிய உரைநடையில் அமைந்த சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் பிற்கால உரைநடை வளர்ச்சிக்குப்  பெரிதும் உதவி   செய்தன   என்றாலும்   கல்தச்சர்கள் தமிழறிவு பெரிதும் வாய்க்கப் பெறாதவர்களாக இருந்தமை காரணமாக அவர்கள் கல்லில் பொறித்த உரைநடை பெரும்பாலும் பிழை நிறைந்ததாக  உள்ளது. அதை உரைநடை வளர்ச்சிக்கு அளவுகோலாக கொள்ள இயலாது என்கிறார் பெரியசாமி தூரன்(முன்னுரை பாரதி தமிழ் வசனத் திரட்டு)

18 –ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை 
                        ஐரோப்பியரின் வருகைக்குப் பின் உரைநடைத் தமிழுக்குச் செல்வாக்குப் பெருகியது. மத போதகர்களின் வசன நூல்கள் வெளிவரத் தொடங்கின. வீரமாமுனிவர் அவி வேக பூரண குரு கதை  (பரமார்த்த குரு கதை) வேதியர் ஒழுக்கம் ஆகிய உரைநடை நூல்களை எழுதினார்.  சிவஞான போதத்தை விளக்கும் திராவிட மகா பாடியம் என்ற நூலை இயற்றினார் சிவஞான முனிவர். “வசனநடை கை வந்த வல்லாளர்” ஆறுமுகநாவலர் தெளிவான உரைநடைக்கு முதலில் வழி காட்டியவர். இவரது நல்ல உரைநடைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவை “பெரிய புராண வசனம்”  , “திருவிளையாடல் புராண வசனம்”,    “கந்தபுராண வசனம்” முதலியவை. திருவருட்பிரகாச வள்ளலார் “மனுமுறை கண்ட வாசகம்”, “ஜீவ காருண்யம்” முதலான   உரைநடை   நூல்களை எழுதி உள்ளார். இருபதாம் நூற்றாண்டு தொடங்கிய பின்னர் பல துறைகளையும் தழுவி தமிழில் உரைநடை நூல்கள் வெளிவரலாயின. மறைமலைஅடிகள் தனித்தமிழிலும், திரு.வி.க அழகு தமிழிலும் நூல்களைப் படைத்து தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டினர். தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் எளிய, இனிய நடையில் என் சரித்திரம், நினைவு மஞ்சரி போன்ற உரைநடைச் செல்வங்களை தமிழுலகிற்கு வழங்கினார். மோனைச் சிறப்புடன் அடுக்கு மொழியாகத் தமிழைக் கையாண்டவர் டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை. அவரது படைப்புக்களில் “தமிழ் இன்பம்”, “ஊரும் பேரும்”  போன்ற உரைநடை நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவன.சிந்தனையைத் தூண்டு வன. பண்டிதமணி கதிரேசச்செட்டியார், நாவலர்  சோமசுந்தர பாரதியார், ந.மு.
வேங்கடசாமி நாட்டார்,   தெ.பொ.மீ கா.அப்பாத்துரையார் முதலியவர்கள் தமிழில் உயர்நடையைக் கையாண்டு செறிவுள்ள உரைநடை நூல்களை இயற்றி இருக்கிறார்கள். மகாகவி பாரதியார் சிறுசிறு தொடர்களைக் கையாண்டு தமிழ் உரைநடையில் புதுமையைப் புகுத்தினார்.   

நாவல் - சிறுகதை 
                           முதன்முதலாகத் தமிழுக்கு நாவல் இலக்கியத்தை அளித்தவர்   மாயூரம்வேதநாயகம் பிள்ளை அவர்   படைத்த   முதல் நாவல் பிரதாபமுதலியார் சரித்திரம்.அதைத் தொடர்ந்து ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரம் மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் ஆகியவை நாவல் வளர்ச்சிக்கு வித்திட்டன. இன்று  வரை அழியாப்  புகழுடன் நின்று நிலவும் வரலாற்று நாவல்களைக் கற்பனை கலந்து படைத்து அளித்த கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி
சரித்திர   நாவலாசிரியர்களின் முன்னோடியாக விளங்குகிறார். அகிலன், நா.பார்த்தசாரதி லஷ்மி, ஜெயகாந்தன் ஜெகசிற்பியன், சுஜாதா ஆகிய தமிழின் தலைசிறந்த நாவலாசிரியர்கள் தனித்தனி முறைகளைக் கையாண்டு மறக்க முடியாத புதினங்களை உருவாக்கினர். அவர்களைப் பின்பற்றி பல புதிய எழுத்தாளர்கள் காலந்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர்.தமிழில் சிறுகதை இலக்கியத்தை ஜீவனுள்ள இயக்கமாகத் தொடங்கி வைத்தவர் சிறுகதை மன்னன் என்று புகழப்படும் புதுமைப்பித்தன் ஆவார். கு.ப.ரா, சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன், ராஜம்கிருஷ்ணன், ஜெயகாந்தன் ஆகியோரின் கைவண்ணத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி பெற்றது; வளம் பெற்றது. ஆனால் தற்போதைய சூழலைப் பார்க்கும்போது சிறுகதை நாவல் போன்றவை அருகி வருவது போல் தோன்றுகிறது. அரசியல், மருத்துவம் விளையாட்டு,அறிவியல் போன்ற பல துறைகளிலும் வெளிவரும் கட்டுரைகளுக்கே செல்வாக்குப் பெருகி வரக் காண்கிறோம்.

ஏடுகள் வளர்த்த உரைநடை
                    செந்தமிழ், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி போன்ற தமிழ் இலக்கிய ஏடுகள் செறிவுள்ள விடயங்களை உரைநடை   வாயிலாக வெளியிட்டு தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் தொண்டு ஆற்றியுள்ளன. ஆயினும் இந்த மாசிகைகள் கடினமான நடையில் இருந்ததால் புலமை   படைத்தவர்களால் மட்டுமே படிக்கப் பட்டன. பொது மக்களைச் சென்று அடையவில்லை. அதனால் தமிழ்நாடு, தினமணி போன்ற நாளிதழ்களும் கல்கி, ஆனந்தவிகடன், போன்ற இதழ்களும் எளிய தமிழில் உரைநடையை வளர்த்து மக்களின் படிக்கும் பழக்கத்தை விரிவுபடுத்தின. ஆனால் இன்று ஆங்கிலம் கலந்த தமிழே பெரும்பாலான ஏடுகளில் கையாளப்  படுவதை வேதனையுடன் காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முடிவுரை
          மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவிஞர் கண்ணதாசன் போன்றவர்கள் தங்கள் கவிதைகளால் புகழ்பெற்றவர்கள். இவர்கள் உரைநடை இலக்கியத்தை  வளர்ப்பதிலும் பெரும் பங்கு ஆற்றியுள்ளனர். சுதேசமித்திரன், இந்தியா ஏடுகளின் வாயிலாக பாரதி அருமையான அரசியல் கட்டுரைகளை
எழுதிக் குவித்தார். பாரதிதாசனின் தமிழ் இயக்கம் குறித்த கட்டுரைகள் தமிழிர் நெஞ்சில் உரம் ஊட்டின. கண்ணதாசன் திராவிட இயக்கத்தில் இருந்த போது தமிழ் மொழி பற்றியும் தமிழர் பெருமை குறித்தும் பல உணர்ச்சி ததும்பும் கட்டுரைகளைப் படைத்துள்ளார். பின்னாளில் அவர் ஆன்மீகத்தைப் பின்பற்றிய போது அர்த்தமுள்ள இந்து மதம் போன்ற ஆன்மீகக் கட்டுரைகளைத் தனக்கே உரித்தான தனி நடையில் எழுதியுள்ளார். பேரறிஞர் அண்ணா எழுத்துத்துறையில் தொடாத பொருள் இல்லை. தொட்டு துலங்காதது எதுவுமில்லை.தம்பிக்கு என்று அவர் எழுதிய  கடிதங்கள் சமூக சீர்த்திருத்த நாடகங்கள், திரைப்படங்கள் வாயிலாக தமிழ் உரைநடையை உச்சத் திற்குக் கொண்டு சென்றார். கருத்துக்களை எளிதில் சொல்வதற்கேற்ற சிறந்த கருவி உரைநடையே படிப்போரும் உரைநடையை எளிதில் புரிந்து கொள்வர் அதனால் உரை நடையே இன்று எம்மொழியிலும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது.
சிறந்த வசன நடை எழுதுவதற்கு இலக்கணம் பயன்பட மாட்டாது என ஒதுக்குதல் தவறு வசன நடையும் இலக்கணத்திற்கு உட்பட்டதே ஆகும்”.
என்பது எஸ்.வையாபுரிப் பிள்ளையின் கருத்து (தமிழின் மறுமலர்ச்சி பக் - 115)  இலக்கணத்திற்கு உட்பட்ட சிறந்த உரைநடையைக் கையாள டாக்டர் மு.வ, டாக்டர்.சி.பா, போன்ற தமிழறிஞர்களின் கட்டுரைகளை முன்னோடியாகக் கொள்ள வேண்டும். எம்மொழியாம் செம்மொழித் தமிழில் உரைநடை இலக்கியம் துறை தோறும்   துறைதோறும்  வளர்ந்து புதுவகை நூல்களை உருவாக்கும் என்பதில் அய்யமில்லை.