Powered By Blogger

Sunday, May 29, 2011

குஜராத் நாட்டுப்புறக் கதை

பெண் புலி

வெகு காலத்திற்கு முன், குஜராத் மாநிலத்தில், மக்கள் ஊர் விட்டு ஊர்
செல்வதற்குச் சாலைகள் மட்டுமே பயன்பட்டன. அவர்கள் பயணம்
செய்வதற்கு ஒட்டகங்களையும் சிறு வண்டிகளையும் உபயோகித்தனர்.
மாடுகள் பூட்டிய வண்டிகளும், குதிரை வண்டிகளும் புழகத்தில் இருந்தன.
இவ்வாறு பயணம் செய்து ஊர்களுக்குச் செல்வதற்கு அதிகமான காலம்
செலவானது. பயங்கரமான திருடர்களும் வழிப்பறி செய்வதுண்டு. சில
நேரங்களில் கொள்ளைக்காரர்கள் கூட்டமாக வந்து பிராயணம் செய்யும்
பெண்களின் நகைகளை அடித்துப் பிடுங்கிக் கொண்டு ஓடி விடுவார்கள்.

பயணங்களின் இடையே தொல்லை தரும் கொள்ளைக்காரர்
களிடமிருந்து பிரயாணிகளைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று
கிராமத்துப் பெரியவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். பயணத்தின் போது
பாதுகாப்பாகக் கூடவே செல்வதற்குத் தொழில் முறைப் பாதுகாவலர்களை
உரிய ஊதியம் கொடுத்து நியமிக்கலாம் என்று முடிவெடுத்து அதன்படியே
பாதுகாவலர்களை நியமித்தனர். அவர்கள் திருமணக் குழுவினருடன்
பாதுகாப்பாகச் செல்வார்கள். ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு

கிராமத்திற்குப் பிறந்த வீட்டிலிருந்து கணவர் வீட்டிற்கோ அல்லது புகுந்த
வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்கோ பெண்கள் செல்லும் போது அவர்களுக்குப்
பாதுகாப்பாக இந்தப் பாதுகாவலர்கள் செல்வார்கள். அதோடு கிராமத்தினர்
சொல்லும் வேலைகளையும் செய்வார்கள்.

இந்தப் பாதுகாவலர்களில் ஒருவன் ஜிமா. அவன்
அக்கிராமத்தினரிடம் நல்ல பெயரைச் சம்பாத்திருந்தான். ஜிமா மிகுந்த
பலசாலியாகவும்,துணிவுடையவனாகவம் விளங்கியதால் உள்ளூர்த்
திருடர்கள் அவன் பெயரைக் கேட்டவுடனே அஞ்சி நடுங்கி ஓடி விடுவர்.
இதனால் ஜிமாவிற்குத் தலைகனம் ஏறிவிட்டது.அவன் தனக்கு நிகர்
யாருமில்லை என்று கர்வம் கொண்டான். தன்னுடைய பெருமைக்குக்
கிராமத்தினர் ஏவும் சிறிய வேலைகளைச் செய்வது இழுக்கு என்று
கருதினான். தன் புகழ் நிலைத்து நிற்கும் வகையில் பெரிய வேலைகளைச்
செய்ய வேண்டுமென்று கருதினான். அவன் தன்னைப் பற்றி எல்லோரிடமும்
பெருமையாக பேசத் தொடங்கினான். “நான் யார் தெரியுமா? இந்த ஊரில்
உள்ள அனைவரையும் விட தைரியமானவன்” என்று அனைவரிடமும்
அகந்தையுடன் கூறுவான்.

ஜிமா இருந்த கிராமத்திலிருந்து பத்து கல் தொலைவிலிருந்த
மற்றொரு கிராமத்தில் ஒரு இளம் பெண் வசித்து வந்தாள். அவள் பெயர்
ரூபாலிபா அவளுக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆகி இருந்தது. அவள்
தன் முதல் குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தாள். கருவுற்றிருந்த
அவளை மாமனார் வீட்டில் சீராட்டி, உரிய சடங்குகள் செய்து அவளது
தந்தை வீட்டிற்கு அனுப்பி வைக்கத் தீர்மானித்தனர்.அவளுக்குப்
பாதுகாவலாக உடன் செல்ல ஜிமா பணி அமர்த்தப்பட்டான்.

ரூபாலிபா புத்தாடை அணிந்திருந்தாள். அவள்
உடம்பிலும் கைகளிலும் கழுத்திலும் ஆபரணங்கள் அலங்கரித்தன.
தந்தை வீட்டிற்கு அவள் செல்ல வேண்டிய வழி பாலைவனமாக இருந்தது.
அவ்வழியில் ஒரு சில புதர்களைத் தவிர செடி, கொடி, மரம் ஏதுமில்லை.
அந்தப் பாதை தனிமைப்படுத்தப் பட்டு அச்சம் தரும் வகையில்
அமைந்திருந்தது. எருதுகள் பூட்டிய ஒரு வண்டியில் ரூபாலிபா
ஏறிக்கொண்டாள். மற்றொரு வண்டியில் ஜிமா வர பயணம் தொடங்கியது.
இரண்டு பீப்பாய் நிறைய தண்ணீரும் கொண்டு சென்றனர்.

இருட்டத் தொடங்கியதும் ஜிமா தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.
வண்டிக்காரன் அவனைப் பல முறை தட்டி எழுப்பி“எழுந்திரு! எழுந்திரு!
இருட்டி விட்டது; இப்போது தூங்குவது பாதுகாப்பான செயல் அல்ல” என்று
கூறினான். பாதித் தூக்கத்திலிருந்த ஜிமா “ஏன் பயப்படுகிறாய்? நான் ஜிமா
இருக்கிறேன் என்னை மீறி எதுவும் நடந்து விடாது. நீ வாயை மூடிக்
கொண்டு வண்டியை ஓட்டு” என்று அதட்டினான்.

படுதாவிற்குப் பின்னால் அமைதியாக அமர்ந்திருந்த
ரூபாலிபா ஜிமாவை அழைத்து “ஜிமா தூங்காதே! நீ இப்போது விழிப்போடு
இருக்க வேண்டும் ஏனென்றால் இப்போது இருட்டாகவும் தனிமையாகவும்
இருக்கிறது” என்று கூறினாள். ஆனால் ஜிமா அதைப் பற்றிக் கவலைபடாமல்
முன்னிலும் பலமாகக் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான்.

திடீரென்று வண்டிக்காரன் ஜிமாவை எழுப்பி, “எழுந்திரு
ஜிமா! தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது நம்முடன் வந்துள்ள அந்தப்
பெண்ணைப் பாதுகாக்க உன்னைத் தயார் படுத்திக் கொள்” என்று கூறினான்.
ஆனால் ஜிமா குறட்டை விட்டவாறே, “நான் ஜிமா என்பதை நினைவில்
வைத்துக் கொள்” என்று கூறிக்கொண்டே தூங்கி விட்டான்.

வெளிச்சம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. வண்டிக்காரர்கள்
மிகவும் அச்சமுற்று செய்வதறியாது திகைத்தனர். அப்பொழுது கையில்
ஆயுதம் ஏந்திய கொள்ளைக்காரர்கள் திடீரென்று வந்து வண்டிகளைச்
சூழ்ந்து கொண்டார்கள் முதலில் கொள்ளைக்காரர்கள் ஜிமாவைப் பிடித்துக்
கை கால்களை ஒரு கம்பத்தில் கட்டி மணலில் தள்ளினர். அவன்
பாலைவன மணலில் உருண்டு கொண்டே சென்று ஒரு புதர் தட்டி
விழுந்தான் கொள்ளைக்கூட்டத் தலைவன் ரூபாலிபாவிடம் சென்று அவளது
நகைகளைக் கழற்றித் தருமாறு மிரட்டினான். அவள் நகைகளை போட்டு

வைத்திருந்த பெட்டியைக் கொள்ளக்கூட்டத்தினரிடம் கொடுத்தாள் ஒரு
பெண் அணிந்திருக்கும் நகைகளைக் கழற்ற கூடாது என்பது திருடர்களின்
கொள்கையாக இருந்தது.ஆனால் இந்தத் திருடர் தலைவனோ, அந்த
வழக்கத்தையும் மதிக்கவில்லை. ரூபாலிபாவிடம் சென்று,
“நீ அணிந்திருக்கக்கூடிய வெள்ளிச் சிலம்பையும் நகைகளையும் கொடு”
என்று கேட்டான்.
ரூபாலிபா எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்தாள். “என்னுடைய இந்தச்
சிலம்பு வலிமையான சுத்த வெள்ளியில் செய்யப்பட்டது. நான் கருவுற்று
இருப்பதால் நகைகளைக் கழற்றக் கூடிய தெம்பு என்னிடம் இல்லை. ஆனால்
நீங்கள் விரும்பினால் அவற்றை நீங்களே எடுத்துக் கொள்ளலாம்” என்று
கூறிக்கொண்டு திரைக்கு வெளியே இரு பாதங்களையும் நீட்டினாள். இரண்டு
திருடர்கள் அவளது பாதங்களிலிருந்த சிலம்பைப் பறிக்க முயன்றனர்.
ரூபாலிபா வண்டிக்குள் சுற்றும் முற்றும் பார்த்து அங்கே கிடந்த ஒரு
கனமான கட்டையை எடுத்து இரண்டு திருடர்களின் தலையிலும் ஓங்கி
அடித்தாள். அவர்கள் மண்டை உடைந்து இறந்து போனார்கள்.

ரூபாலிபா வண்டியிலிருந்து கீழேக் குதித்துக் கையிலிருந்த
கட்டையினால் மற்றத் திருடர்களையும் சுற்றி சுழன்று அடித்தாள்.
ஒரு தைரியமுள்ள ராஜபுதனத்துப் பெண்ணைப் போல் துணிச்சலுடன்
சண்டையிட்டாள். கொள்ளைக் கூட்டத் தலைவன், அடிப்பட்ட தன்
ஆட்களை அங்கேயே விட்டு விட்டு எஞ்சியவர்களுடன் பாலைவனத்திற்குள்
ஓடி மறைந்தான். இதற்கிடையே ஜிமா தன்னுடைய கட்டுக்களை அவிழ்த்துக்
கொண்டு ரூபாலிபாவின் முகத்தில் விழிக்க வெட்கப்பட்டு ஓடி மறைந்தான்.

ரூபாலிபா வண்டிகளை ஓட்டச் சொல்லிக்
கொள்ளைக்காரர்களிடமிருந்து பறித்த வாள்களில் ஒன்றைக் கையில்
பிடித்துக் கொண்டு வண்டிகளுக்குப் பின்னால் பாதுகாப்பாகச் சென்றாள்.
துன்பங்களை எதிர்கொண்டு வழியில் உள்ள அவளது மாமாவின் கிராமத்தை
அடைந்தாள். அவர் அவளுக்கு உடல் வலியைக் குறைப்பதற்காக கசம்பா
என்ற பானத்தை கொடுத்தார். பின்னர் ரூபாலிபா அங்கிருந்து அவளது
தந்தையின் வீட்டிற்குச் சென்றாள் அவள் மிகவும்களைப்புற்றிருந்தாள்.
சண்டையில் ஏராளமான ரத்தத்தை இழந்ததால் அவள் இறந்து போனாள்.

ரூபாலிபா என்ற அந்த இளம் பெண்ணின் தைரியத்தை
இன்றும் அந்தக் கிராமத்தினர் நினைவு கூருகின்றனர். ரூபாலிபாவையும்
கொள்ளைக்கூட்டதாருடன் சண்டையிட்ட அவளது வீரத்தையும் புகழும்
பாடல்கள் இன்றும் முழங்கி வருகின்றன.

Sunday, May 22, 2011

Saturday, May 7, 2011

அண்ணா

காஞ்சிநகர் கல்வெட்டைக்
காலமழை அழிக்காது
கரும்புநிகர் சொல்வெட்டைக்
கவினுலகம் மறக்காது
கலை தந்த தலைமகனைக்
கன்னித்தாய் தமிழுக்கு
நிலை தந்த கலைமகனைப்
பிழையின்றிப் போற்றிடுவோம்
அண்ணா துயிலுமிடம்
அன்புதனைப்பயிலுமிடம்
அவன் நினைவே நிம்மதி
அண்ணனன்றோ நம்மதி.