முன்னுரை
இன்று உலகில் அமைதி நிலவுவதற்கும்
சமதர்ம சமுதாயம் மலர்வதற்கும் மக்களின் ஒருங்கிணைப்பும் மனங்களின் ஒருமைப்பாடும் இன்றியமையாத
தேவைகள். நாடு நன்னாடாகவும் வளத்தில் பொன்னாடாகவும் திகழ்வதற்கு முழுமுதற்காரணமாக விளங்குபவர்கள்
அந்நாட்டு மக்களே ஆவர் இதைத் தான் ஔவையார்
நாடா கொன்றோ காடா
கொன்றோ
அவலா
கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே 1
என்று பொருண்மொழிக்
காஞ்சி துறையில் பாடியிருக்கிறார்.
நாடு
என்பது பல்வேறு குணநலன்களையும் வேறுபட்ட உழைக்கும் திறனையும் கொண்ட மக்களால் பின்னப்பட்டது.
ஆயினும் அவர்கள் அனைவரையும் தேசியம் என்ற இணைப்பு நூலால் ஒருங்கிணைத்து ஒரே நாடாக உருவாக்குவதுதான்
தேசிய ஒருமைப்பாடு. ஒருமைப்பாடு இல்லையேல் உலகம் இல்லை. இந்த உண்மை தற்காலத்திற்கு
மட்டுமன்றி முற்காலத்திற்கும் எக்காலத்திற்கும் பொருந்திவருவது. இந்த ஒருமைப்பாட்டு
நிலையை தமிழ் இலக்கியங்களின் வழி கண்டறிதலே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம்.
ஒருமைப்பாடு
சமூகத்தில் மக்களை ஒருங்கிணைப்பதற்கு
உதவும் கருவிகளாக இனம், மொழி, மதம் சமயம் ஆகியவற்றை உருவாக்கினர் நம் முன்னோர். ஒருமை
என்ற சொல்லிற்கு இறையுணர்வு – ஒற்றுமை - ஒரேதன்மை, மனம்ஒன்றுகை - மனம்ஒருமிக்கை என்று
பொருள் தருகிறது ஆனந்தவிகடன் அகராதி.2 அதைப் போல ஒருமைப்பாடு என்பதற்கு ஒன்றிப்பு, ஒற்றுமைப்படுத்தல்
என்று விளக்கமளிக்கிறது.‑3
ஆங்கிலத்தில் உள்ள Integration என்ற சொல்லிற்கு முழுமையாக்கம்
ஒருமைப்பாடு, பல்வேறுபட்ட சமுதாயத்தை ஒரே முழு அமைப்பாக பகுத்தமைக்கும் செயல் என்று
விளக்கமளிக்கிறது. ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம்.4
இனம், மொழி, மதம், சமயம் இவற்றில் ஒருமைப்பாட்டுக்கான
சான்றுகளை தமிழ் இலக்கியங்களின் வாயிலாகக் காண்போம்.
இன வழி ஒருமைப்பாடு
சங்க காலத்தில்
தமிழகத்தில் மேற்குக் கடற்கரைப் பகுதியைச் சேரர்கள் ஆண்டனர். தெற்குக் கடற்கரைப் பகுதியை
ஒட்டிப் பாண்டியர் ஆண்டனர். கிழக்குக் கடற்கரை வடக்குப் பகுதியை சோழர்கள் ஆண்டனர்.
இடைப்பட்ட பல பகுதிகளில் குறுநில மன்னர்களாகிய பாரி, காரி, ஓரி, அதியமான், ஆய், பேகன்
போன்றோர் ஆண்டனர். நாட்டில் கலைஞர்களும் புலவர்களும் இருந்தனர். அவர்களையெல்லாம் குறுநில
மன்னர்களும், பேரரசர்களும் பாதுகாத்து, வந்தவர்க்கு இல்லை என்னாது வரையாது கொடுத்தனர்.
காலத்தால் முந்தியது
சங்க இலக்கியம். அக்காலத்திலேயே இந்திய நாடு முழுவதையும் ஒன்றாகக் கருதினர் தமிழர்கள்.
சங்க இலக்கியமும், சிலப்பதிகாரக் காப்பியமும் இந்திய நாட்டை நாவலந் தண்பொழில் என்று குறிப்பிடுகின்றன.
நாவல்அம்
தண்பொழில் வீவு இன்று விளங்க 5
நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்று 6
தமிழ் மன்னர்கள்
பாரதம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆண்டதாக சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
குமரியொடு வடவிமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட7
“தமது
செல்வாக்கால் இந்திய ஒருமைப்பாடு கண்ட பெருமை ஆங்கிலேயர் ஆட்சிக்கு நெடுநாட்களுக்கு
முன்னரே தமிழ் அரசர்களிடம் இருந்தது”.8
மலைநாட்டவர், கடல்பகுதியினர், மருதநிலத்தவர்,
காடுகளில் வாழ்வோர் என்று நான்கு நிலப்பகுதிளில் வாழ்ந்த இனமக்கள் தொழிலால் வேறுபட்டாலும்
ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்ததாக சங்க இலக்கியம் காட்டுகிறது.
நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?
யாங்ஙனம்
மொழிகோ, ஓங்குவாட் கோதையை 9
மலை நாட்டவன் மற்ற மூன்று நிலத்திற்குக்
கூட தலைவனாகி பெருமை பெறுகிறான் என்பது இதன் பொருள்.
தமிழில் பெருங்காப்பியமான கம்பஇராமாயணத்தில் காப்பிய நாயகன்
இராமன் நாவாய் வேட்டுவன் குகனையும் குரக்கினத்தைச் சார்ந்த சுக்ரீவனையும் சகோதரர்களாக
ஏற்றுக் கொண்ட செயல் இன ஒருமைப்பாட்டிற்கு அருமையான இலக்கியச் சான்றாகும்.
பிற்காலத்தில் பாரதியின் வரிகளில்
நம் நாட்டின் இன வழி ஒருமைப்பாட்டை உணர்ந்து அனுபவிக்கிறோம்.
முப்பது
கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
\ ஒப்பில்லாத சமுதாயம்
உலகத்திற்கொரு
புதமை 10
மொழி வழி ஒருமைப்பாடு
சமூகத்தில் மக்களை ஒருங்கிணைப்பதற்கு
உதவும் கருவிகளாகத் தான் இனம், மொழி, மதம், சமயம் இவை தோன்றின. ஆனால் மக்களை ஒருமைப்படுத்த
வேண்டிய அவையே மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் அசுர சக்திகளாக மாறி ஆட்டிப் படைப்பது
தான் கொடுமை.
“செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்”11 என்று செம்மாந்து பாடினான் பாரதி
“எந்தம் மொழிகள் இந்திய மொழிகள் என்ற சொந்தத்திலே சிந்தனை ஒன்றுடையாள் என்றதை
வளமாக்கி வலுவூட்ட வேண்டும். அத்தனை இந்திய மொழிகளும் போற்றி வளர்ப்பது அடிப்படையில்
இந்திய எண்ணம்; ஆதார இந்தியச் சிந்தனை பாரத உணர்வே பண்ணின் சுருதி பதினெட்டு மொழிகளும்
இராகங்கள்”12 என்கிறார் கா.திரவியம்.
தமிழக வாணிகர் வேறு நாடுகளுக்குச்
சென்று வாணிகம் செய்தனர். அங்குள்ள வாணிகர் தமிழகம் வந்து தங்கினர். அரபு வாணிகரும்
யவன வாணிகரும் தமிழகத் துறைமுகப் பட்டினங்களில் வதிந்தனர். கன்னடர், துளுவர், சேர நாட்டினர்
போன்ற வேறு வேறு மொழி பேசுவோரும் இங்கு ஒருங்கிணைந்து வாழ்ந்தனர். மொழிகளின் ஒருமைப்பாடு
நிலவியது.
சிலப்பதிகாரமும் பட்டினப்பாலையும்
இங்கு மொழி பல இருந்ததை சுட்டிக் காட்டுகின்றன:
பயனற வறியா யவனர் இருக்கையும்
கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள்
கலந்தினி துறையும் இலங்குநீர் வரைப்பும் 13
மொழி பெயர் தேயத்தோர்
ஒழியா விளக்கம் 14
மொழி பல பெருகிய
பழநீர் தேஎத்துப்
புலம்பெ\யர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்.15
புதுமைக் கவி பாரதியும்
சிந்துநதியின்மிசைநிலவினிலே
சேரநன்னாட்டிளம்பெண்களுடனே
சுந்தரத்தெலுங்கினிற்பாட்டிசைத்துத்
தோணிகளோட்டிவிளை யாடிவருவோம்.16
என்று மொழியால் இணைந்த தேசிய
ஒருமைப்பாட்டை கவிதைச் சித்திரமாகத் தீட்டியுள்ளார்.
சமய வழி ஒருமைப்பாடு
மதுரையில் சிவனுக்கும் முருகனுக்கும் கோயில்கள்
இருந்தன. அதோடு “பௌத்தப் பள்ளியில் பௌத்த பிக்குகள்
இருந்து அறவுரை கூறினர். சமணப் பள்ளியில் சமண முனிவர் இருந்து அறவுரை ஆற்றினர் என்று
மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.17 எல்லா மதங்களும் எல்லா சமயங்களும் ஒருங்கிணைந்திருந்தது நமது
தமிழ்ச்சமுதாயம் என்பதற்கு சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் பிற்கால இலக்கியங்களிலும்
அளவிறந்த சான்றுகள் உள்ளன.”.
மகாகவி பாரதி ஒன்றே சாதி என்பதை
இப்படிப் பாடியுள்ளார்
சாதிக் கொடுமைகள் வேண்டாம், -- அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; -- தொழில்
ஆயிரம் மாண்புறச்
செய்வோம்.18
முடிவுரை
தமிழ் இலக்கிய உலகில் தேசிய ஒருமைப்பாட்டுச் சிந்தனைகள்
காலந்தோறும் நிலவி வந்துள்ளன. சங்க இலக்கியங்களிலிருந்து பாரதியார் வரை, அதற்குப் பின்னும்
பாரதிதாசன் முதல் இன்றைய இலக்கியங்கள் வரை தொடர்ந்து ஒருமைப்பாட்டுச் சிந்தனைகள் சங்கிலித்
தொடராக வந்து கொண்டிருக்கின்றன. சங்கஇலக்கியம் சிலப்பதிகாரம் பாரதியார் பாடல்களிலிருந்து
இக்கட்டுரையில் சுட்டியிருப்பது ஒரு சிறு துளியே. தமிழ் இலக்கியக் கடலில் மூழ்கி முத்தெடுக்க
வேண்டிய ஒருமைப்பாட்டுச் சிந்தனைகள் பெருமளவில் உள்ளன அவற்றையும் அறிதல் தமிழரின் கடமை
ஆகும்.