Powered By Blogger

Saturday, February 24, 2018

பயண இலக்கியம் காட்டும் தமிழர் பண்பாட்டு நெறிகள்

தமிழர் பண்பாட்டின் சிறப்பை தனிநாயகஅடிகளாரைப் போல் தெளிவுற விளக்கும் ஆற்றல் பெற்றார் வேறு எவரும் இலர். இன்று நாம் பண்பாடு எனும் சொல்லால் குறிப்பிடும் துறைகளை நம் முன்னோர் பண்பு, பண்புடைமை, சால்பு, சான்றாண்மை முதலிய சொற்களால் குறித்துள்ளனர்” . . . . “தமிழ்ச் சொல்லாகிய பண்பு என்பது நிலத்தைப் பண்படுத்துவதிலிருந்து தோன்றி இருக்க வேண்டும். உழவுத் தொழில் எவ்வாறு நிலத்தைப் பண்படுத்துகிறதோ அவ்வாறே மனத்தையும் மக்களையும் பண்படுத்துவது பண்பு இச்சொல்லைத் தான் பண்பாடு என்னும் பொருளில் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் நூலாசிரியர் பயன்படுத்தியுள்ளார்.” என்று தனிநாயக அடிகள் விளக்குகிறார்.1
   ‘பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்’2 என்று விளக்குகிறது கலித்தொகை.
 ‘பண்புடையார்ப்பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
             மண்புக்கு மாய்வது மன்’‑3
என்பது குறள்.
                ‘’மனித  இனங்களில் மிகத் தொன்மையானது தமிழர் இனமே என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுள்ளனர் இந்தத் தொன்மையினால் மாத்திரம் தமிழர்களுக்குப் பெருமை வந்துவிடாது. சிறந்த கோட்பாடுகளையும் உயர்ந்த கலைகளையும் பாராட்டுதற்குரிய பண்புகளையும் போற்றுதற்குரிய குறிகோள்களையும் வாழையடி வாழையாக சுடர்விட்டு வளர்த்து வந்த தொன்மையாக இருப்பதால் எல்லோராலும் மதிக்கப்படுகிறது.”4 என்பது நீதியரசர் மு.மு. இஸ்மாயில் அவர்களின் கருத்து’

                 “தமிழ் வணிகர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் தமது வாணிகத்தைப் பெருக்கிய போது தம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் விதைத்து வந்தனர். தமிழகத்து லிங்க வணக்கம் சுமேரியா, எகிப்து, மால்டா கிரீஸ் முதலிய இடங்களில் காணப்படுகின்றன”5 என்கிறார் டாக்டர் மா.இராசமாணிக்கனார்.

             “கி.பி. 1950 இல் தமது குறிப்பு நூலை வரைந்த தாலமி என்பவர் தமிழகத்தைப் பற்றி மிகுதியான விவரங்களை தந்துள்ளார். அவர் தென்னிந்தியாவைப் பார்க்கவில்லை. ஆயினும் தென்னிந்தியாவில் தங்கியிருந்த தம்மவர் கூறியவற்றை விவரமாக எழுதியுள்ளார்.”6 அதில்                               தமிழ்நாட்டுப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் குறிப்பிடும் பல பகுதிகள் உள்ளன. இது பயண இலக்கியம் நமக்கு அளித்த பண்பாட்டுக் குடையாகும்.

                  “தமிழர் நம்முடைய நாட்டில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் சென்று தம்முடைய பண்பாட்டையும் பிற நாட்டுச் செல்வத்தையும் வளர்த்து வருவதே அவரது சிறப்பு”7. என்றும் . . . .  “தமிழர்கள் உலகத்தில் இருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தில் திரியவில்லை. திரை கடல் ஓடித் தம் பண்பாட்டை உலகப் பண்பாடாக வளர்த்து வந்தார்கள்.”8என்கிறார் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.

              “இன்று உலகில் 150 – ற்கும் மேற்பட்ட தனிநாடுகள் உள்ளன. இவற்றில் 50 – க்கு மேற்பட்ட நாடுகள் தமிழோடும் தமிழரோடும் தமிழ்ப் பண்பாட்டோடும் தொடர்புடையன. . . . . இந்த நாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பாலோர் அவர்கள் வாழும் நாடுகளையே தங்கள் தாய்நாடுகளாக ஏற்றுக் கொண்டவர்கள் ஆனால் அவர்கள் எல்லோராலும் அந்தந்த நாட்டு மொழிகளை தங்கள் தாய்மொழிகளாகவும் அந்தந்த நாட்டுப் பண்பாடுகளைத் தங்கள் தாய்ப் பண்பாடுகளாகவும் முழுதாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. தமிழ்ப் பண்பாட்டோடும் தமிழகத்தோடும் தங்களுக்கு நிலையான தொடர்புக்கு வாய்ப்பு வேண்டுமென்றும் விரும்புகிறார்கள்”9.என்று கூறுகிறார்.  டாக்டர் பொற்கோ

                தமிழர் வாழும் வெளிநாடுகளில் நிலவும் தமிழ்ப் பண்பாட்டு கூறுகளை நாம் அறிவதற்கு சாளரமாக விளங்குவது பயண இலக்கியங்களே ஆகும். பயண இலக்கியங்கள் காட்டும் தமிழ்ப் பண்பாட்டுச் சாயல்களை இக்கட்டுரை வாயிலாக ஓரளவு அறியலாம்.

                    “பண்பாடு என்றால் ஓர் இனத்தாரின் கொள்கை, கோட்பாடு, நோக்கம் இலட்சியம் வாழ்க்கைமுறை பழக்கவழக்கம் சமூகச் சட்டம் சமயம் வழிபாட்டுமுறை இலக்கியமரபு அரசியல்அமைப்பு, ஆடைஅணிகலன் திருவிழா, உணவு பொழுதுபோக்கு, விளையாட்டு ஆகியவற்றையெல்லாம் குறிக்கும்”10 என்று பண்பாடு வெளிப்படும் தளங்களை பட்டியலிடுகிறார் தனிநாயக அடிகள்

                  மேலை நாடுகளுக்கு நம் நாட்டிலிருந்து தமிழர்கள் செல்லும் நிகழ்வு 19 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் நடைபெறுகிறது. துவக்க நாட்களில் மருத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் மேற்படிப்புக்காக மேலை நாடுகளுக்கு குறிப்பாக இங்கிலாந்திற்கு தமிழர்கள் சென்று திரும்பினர். அங்கேயே குடியேறும் வாய்ப்புக்கள் மிகச் சமீப காலங்களில் தான் ஏற்பட்டன. அதனால் அந்த நாடுகளில் தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையான அடையாளங்கள் இருப்பதாகக் கூற முடியாது. ஆனால் கீழை நாடுகளுக்கு மிகப் பழங்காலங்களில் தமிழர்கள் சென்று அங்கேயே தங்கி வாழ்ந்ததால் அங்கே நமது பண்பாட்டுச் சின்னங்களும் நெறிகளும் நின்று நிலவ தொடங்கின. இலங்கை, பிஜீதீவு, மலேயா, தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களுக்கு தொழிலாளர்களாக சென்ற தமிழர்கள் நமது பண்பாட்டை மறவாமல் காத்து வருகின்ற தன்மையைப் பயண இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.
                  தமிழ்ப் பயண இலக்கியத் தந்தை என்று போற்றப்படும் ஏ.கே.செட்டியார் சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் பிஜீத் தீவுக்கு சென்ற போது அங்குள்ள தமிழர்கள் வாழ்வியலில் தமிழ்ப் பண்பாட்டின் சாயல்கள் வேரோடி இருப்பதை கண்டார். பிஜீத் தீவின் தலைநகரம் சுவாவில் ஆண்டுதோறும் நடக்கும் முக்கியமான நிகழ்ச்சி மாரியம்மன் தீமிதி உற்சவம். அம்மாதிரியான கோவில்கள் முப்பதுக்கு மேல் இருந்தன. காவடியெடுத்தல், கரகமாடுதல், அலகு குத்திக் கொள்ளுதல், தீமிதித்தல் முதலிய சடங்குகளை செய்து வந்தனர். தேவாரம், திருவாசகம், வேதாந்தப் பாடல்கள் எல்லாம் பாடப்பட்டன. இரவு தமிழில் தெருக்கூத்து நடைபெற்றது.இதைப் பற்றிச் சொல்லும் போது “தமிழ்நாட்டு கிராமம் ஒன்றில் நடைபெறும் உற்சவம் போலவே இருந்தது. தாய்நாட்டை விட்டு பத்தாயிரம் மைல் தூரத்திற்கு அப்பால் அம்மாதிரி காட்சியைக் கண்டது மிகவும் மகிழ்ச்சி அளித்தது”11 என்கிறார் ஏ.கே.செட்டியார்

             ஏ.கே.செட்டியார் பிஜீதீவில் பூர்வ குடியைச் சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு விருந்தினராகச் சென்ற போது அவர் உட்காருவதற்கு தடுக்குப்பாய் போட்டனர் . சாப்பிட்ட பொழுது அந்த வீட்டுக்காரர் பக்கத்தில் உட்கார்ந்து உரையாடினார். பரிமாறிய பொழுது பெண்கள் மிகவும் பணிவோடு உபசரித்தார்கள். தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இது போன்ற உபசரிப்பு நடைபெறுவது கண்கூடு. விருந்தினரை உபசரிப்பதற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் வந்து கூடிவிட்டார்கள் என்பதை ஏ.கே.செட்டியார் பதிவு செய்துள்ளார்.12 இது தமிழகக் கிராமங்களில் நிலவும் பண்பாடாகும்                                      .
                     தமிழரின் அடையாளமான பொங்கல் விழாவும் பாலித் தீவிலும் கொண்டாடப்படுகிறது. தமது பயணக் கட்டுரையில் தாம் கலந்து கொண்ட ஒரு பொங்கல் நிகழ்ச்சியை ஏ.கே.செட்டியார் விளக்கி இருப்பதிலிருந்து தமிழ்ப் பண்பாடு பல்வேறு கோணங்களில் அந்நாட்டில் கடைப்பிடிக்கப்படுவதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. “கிராமத்தில் ஒரு வீட்டின் முன்புறமுள்ள தோட்டத்தில் பொங்கலிட்டு சூரியனுக்குப் படைத்துக் கொண்டிருந்தார்கள். வீட்டின் முன்புறத்தில் இலைகளால் அழகாகத் தோரணம் கட்டியிருந்தார்கள். நன்றாகக் கூட்டி மெழுகிய இடத்தில் கோலமிட்டு பானையில் பொங்கலிட்டார்கள். அடுப்புக்கு எதிரே மூன்று வாழை இலைகளைப் போட்டு அதில் பரிமாறி இருந்தனர். காய்கறி வகைகள் வாழைப்பழம், சர்க்கரை முதலியவற்றை படைத்திருந்தார்கள். குடும்பத்தினர் அனைவரும் படைப்புக்கு முன் தண்ணீர் தெளித்து கீழே விழுந்து வணங்கினர்13 இது நமது பொங்கல் விழா நிகழ்வுகளை கண் முன் கொண்டு வருகிறது.

                             ஜெர்மனியில் ஒரு பல்கலைக்கழகத் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்த பைத்தான் சாஸ்திரியை தமது பயணத்தின் போது பெர்லின் நகரில் ஏ.கே.செட்டியார் சந்தித்தார். சாஸ்திரி எட்டு வருடங்கள் தமிழ்நாட்டில் தங்கியிருந்து முறையாகத் தமிழ்ப் பயின்றவர். அவரது வீட்டில் தமிழ்நாட்டுப் படங்கள் தமிழகத்தில் பயன்படுத்தபடும் கூஜா, மணி முதலிய பழம்பொருள்களையும் ஏராளமான தமிழ்ப் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் கண்டு வியந்ததாக ஏ.கே.செட்டியார் குறிப்பிட்டுள்ளார்.14 பைத்தான் சாஸ்திரி தமிழ்க் கதைகள் சிலவற்றை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்திருந்தார் பாரதியாரின் நூல்களிலே சாஸ்திரிக்குப் பேரார்வம்.

                 புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் லட்சுமி அவர்கள் தென்னாப்பிரிக்காவில் பல ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றி தாயகம் திரும்பிய பின் தமது அனுபவங்களைப் பயண இலக்கியமாகப் பதிவு செய்துள்ளார்.15 டர்பன் நகரில் மட்டும் 80000 இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். தென்னாப்பிரிக்காவில் வசிக்கையில் சில தமிழ்ப் பெண்கள் பாரதி பாடல்களைப் பாடிய பொழுது தமது உள்ளம் குளிர்ந்ததாக லட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

                   டர்பன் நகருக்குச் சற்றுத் தொலைவில் கடற்கரையில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நான்கு நாட்கள் பெரிய விழா நடக்கிறது. திருவிழாக்களில் நம் நாட்டில் காணும் இராட்டினம், தொடர்ச்சியாக ஒலி பெருக்கியில் இசைத்தட்டுப் பாடல்கள் மிட்டாய்கடைகள் பலூன்விற்பனை வளையல் கடை இவையெல்லாம் இடம்பெற்றிருந்தன. நம்முடைய உறவுகளாக தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் நிலையையும் பண்பாட்டையும் எழுத்தாளர் லட்சுமி இவ்வாறாகப் பாராட்டுகிறார். “கடல் தாண்டி அந்நிய மண்ணில் வசதியோடு வேரூன்றி விட்ட நமது மக்கள் தங்கள் தாய்நாட்டை மறக்கவில்லை. நமது கலாச்சாரம் அவர்களுடன் அந்த மண்ணில் வேரூன்றி விட்டது.”  

             எழுத்தாளர் வாஸந்தி பிஜீ தீவில் தமது பயண அனுபவத்தை பயண நூல் வாயிலாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். “தமிழ்ப் பாடம் நடத்தப்படும் ஆரம்ப பள்ளிக்குச் சென்ற போது சின்னஞ்சிறு குரல்களின் ஒலி ஒன்றாய் உள்ளிருந்து வந்தது”16

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
                                         வாழிய வாழியவே

என்ற பாரதி பாடலைப் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் கேட்டதும் என்னுள் ஏற்பட்ட சிலிரப்பை வருணிப்பது அசாத்தியமானது”

           அண்மையில் தாய்லாந்து பயணம் மேற்கொண்ட கோவி. லெனின் “தமிழ்மொழி தாய்லாந்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. மன்னருக்கு முடி சூட்டும் போது திருக்கதவுகள் திறக்கட்டும் என்ற தமிழ் மந்திரத்தைச் சொல்லித்தான் முடிசூட்டுகிறார்களாம். அத்துடன் திருவெம்பாவையும் பாடப்படுகிறதாம் என்று சுட்டிக் காட்டுகிறார்”.17

        சில நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட கவியரசர் கண்ணதாசன் மலேசியாவைப் பற்றி கூறும் போது “சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் செட்டிநாட்டிலிருந்து மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் குடியேறிய செட்டியார்கள் அதே பழக்கவழக்கங்களையே கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்களது பெயர்களும் தமிழ்ப் பெயர்களே” என்கிறார். “மலேசியாவில் பல்வேறு நாகரிகங்களுக்கிடையே புதுமையான உலகத்தில் வாழும் தமிழ்ப் பெண்கள் பழமையான தமிழ்ப் பண்பாட்டை மறவாமல் இருக்கிறார்கள்”18 என்று  பெருமிதப்படுகிறார்.

              பயண இலக்கியம் குறித்த எனது ஆய்வின் போது நான் படித்த நூல்களில் காணப்படும் தமிழ்ப் பண்பாட்டு நெறிகளில் துளிகளே இவை. பயண இலக்கியம் காட்டும் பண்பாட்டுச் செழுமை நமக்கு வழிகாட்டியாக அமையட்டும். பயண இலக்கியங்கள் தமிழ்ப் பண்பாட்டு வெளிச்சத்தை நமக்கு காட்டும் சாளரங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது என்று கூறி என் உரையை முடிக்கிறேன்.

               

No comments: